பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு, செங்கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ள திமுக அரசைக் கண்டித்து வரும் 2ம் தேதி திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், சட்டமன்றப் தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, மக்கள் அனைவரும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகும் வகையில் பல்வேறு செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுக ஆட்சி காலங்களில் ஆண்டுதோறும் தைப் பொங்கலை முன்னிட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், சர்க்கரை, அரிசி, செங்கரும்பு, ரொக்க பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப் படுவது வழக்கம். 2023ம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட இருக்கும் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு, அரசின் சார்பில் செங்கரும்பை கொள்முதல் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் செங்கரும்பை விளைவித்துள்ள நிலையில், தற்போதைய அரசின் அறிவிப்பால் விவசாய மக்கள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
பொதுமக்களும், விவசாய மக்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ள நிலையில், அரசின் சார்பில் வழங்க இருக்கும் பொங்கல் தொகுப்பு குறித்து, அமைச்சர் வேலு செய்தியாளர்களிடம் பேசியபோது, வெல்லம், கரும்பு, முந்திரி போன்ற பொருட்களை வழங்கிய போது, அதன் தரம் குறித்து பல்வேறு புகார்கள் வந்ததால், இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் இதுபோன்ற பொருட்கள் வழங்கப்படவில்லை என பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு, செங்கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ள திமுக அரசைக் கண்டித்தும்; திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, பொங்கல் பரிசாக மக்களுக்கு 5,000/- ரூபாய் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டபடி, தற்போது, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5,000/- ரூபாய் வழங்க வலியுறுத்தியும்; விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்து, மக்களுக்கு வழங்க வலியுறுத்தியும், அதிமுக விவசாய அணி சார்பில், வருகின்ற 2.1.2023 – திங்கட் கிழமை காலை 10 மணியளவில், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், அண்ணாசிலை அருகில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.