அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என டெல்லியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
அதிமுக மூத்த தலைவர்களுள் ஒருவரும் சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து தென்னை விளை பொருட்கள், தென்னை நார், தென்னை மட்டை உள்ளிட்டவை ஏற்றுமதி தொடர்பாக இருக்கும் பிரச்சனைகளை களைய கோரிக்கை வைத்ததாக கூறினார். அதற்கு, மத்திய அரசு சார்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார். மேலும், தென்னை பொருட்கள் ஏற்றுமதிக்காக கூடுதல் கன்டெய்னர் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து அரசியல் ரீதியாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயராமன், அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வாழ்ந்த கோவிலை காலால் எட்டி உதைத்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யார் என்பது நீதிமன்றம் தெரிவிக்கும். அவைமட்டுமல்லாம் குற்றவாளிகளை அன்றைய தினம் தமிழக மக்கள் பார்த்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அதிமுக சூறையாடப்பட்ட விவகாரத்தில் யார் யாரெல்லாம் கலந்து கொண்டார்களோ அவர்கள் அனைவரும் குற்றவாளிகளே. பொதுக்குழு நீதிமன்றத் தீர்ப்பு என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் வகையில் சிறப்பாக அமையும், அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அனைத்து உறுப்பினர்களும் செயல்படுகிறோம். ஒ.பி.எஸ்-ஐ ஒருபோதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
-ம.பவித்ரா








