உலக நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும் என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான இரா.சாணக்கியன் கவனம் செலுத்தியுள்ளார்.
காமன்வெல்த் அமைப்பின் 65 ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கனடாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 500-க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத் தொடரில் பங்கேற்றனர்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல்வேறு நாடுகளின் தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
குறிப்பாக தமிழக சட்ட பேரவையின் சபாநாயகர் எல்.ஏ.அப்பாவுவை சாணக்கியன் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தமிழ் நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையிலான அரசியல் விவிகாரங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

இலங்கைக்கு தமிழக அரசு வழங்கி வரும் உதவித் திட்டங்கள் குறித்தும் அப்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜையும் சாணக்கியன் சந்தித்துப் பேசியுள்ளார்.
“தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்களுடைய பங்களிப்பினையும், தமிழ் அரசியல்வாதிகளின் பங்களிப்பினையும் எவ்வாறு பெற்றுக்கொள்ளவது என்பது குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டது” என்றார் சாணக்கியன்.







