சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக உறுப்பினர் – எடப்பாடி பழனிசாமி நிதியுதவி அறிவிப்பு!

சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக உறுப்பினருக்கு எடப்பாடி பழனிசாமி நிதியுதவியாக ரூ.10,00,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் தெற்கு ஒன்றியம், புளியம்பட்டி ஊராட்சி, கீழ்மைலம்பட்டி கிளைக் கழகத்தைச் சேர்ந்த, கழகத்தின் தீவிர விசுவாசி க.தங்கராஜ் கடந்த 12.8.2025 அன்று பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற, எழுச்சிப் பயண பிரச்சாரத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பும் போது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

கழக உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று, மீண்டும் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புச் சகோதரர் தங்கராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 10,00,000/- ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.