மதுரை மாநாடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை அந்தக் கட்சியினர் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாநாடு குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநாட்டு குழுவுடன் காலை 10 மணிக்கு ஆலோசனை தொடங்கிய கூட்டத்தில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த 5-ம் தேதி சென்னையில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை, நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள், பூத் கமிட்டி பணிகள் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா








