அதிமுக என்பது ஒன்றுதான். இன்று தெளிவான தீர்ப்பு வந்துவிட்டது. இனி குழப்பம் இல்லை என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் அக்கட்சியினர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலை முழுவதும் நிரந்தர பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி பேனர்களை கட்சி நிர்வாகிகள் வைத்துள்ளனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக நாடளுமன்ற பூத் கமிட்டி அமைப்பது, கர்நாடக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக என்பது ஒன்றுதான் – இன்று தெளிவான தீர்ப்பு வந்துவிட்டது. இனி குழப்பம் இல்லை. ஆட்சி மாற்றம் ஏற்படுவது இயற்க்கை. ஆகஸ்ட் 20ம் தேதி அன்று மதுரையில் மாநில மாநாடு சிறப்பாக நடைபெறும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒன்ற தலைமை என்று சொல்ல வேண்டாம் என்னை பொறுத்த வரை நான் சாதாரண தொண்டன். நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின் வெற்றி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும். இனி எங்கள் பணியே வேறு, மற்றவர்களை பற்றி பேசி எங்கள் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஒரு சிலரை தவிர மற்ற அனைவரையும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம். திமுகவை எதிர்க்க கூடிய தெம்பும், திரானியும் உள்ள ஒரே கட்சி அதிமுக தான். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்று கூறினார்.







