நிதி நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

இன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரூத்ரா உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் மோசடி குறித்துப் பேசினார். அவர் பேசியதை முழு தொகுப்பாக இந்த செய்திக்குறிப்பில் பார்ப்போம்.…

இன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரூத்ரா உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் மோசடி குறித்துப் பேசினார்.

அவர் பேசியதை முழு தொகுப்பாக இந்த செய்திக்குறிப்பில் பார்ப்போம். சட்டமன்றப் பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘ மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, ​மாண்புமிகு உறுப்பினர் திரு. ராமச்சந்திரன் அவர்கள் இங்கே உரையாற்றுகின்ற போது, நிதி நிறுவனங்கள் செய்து கொண்டு இருக்கக்கூடிய முறைகேடுகளைப் பற்றி எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். அதிலும் குறிப்பாக ஆரூத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் கடந்த அதிமுக ஆட்சி இருந்த போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வைப்பீடுகளுக்கு 25 முதல் 30 விழுக்காடு மாத வட்டி என கவர்ச்சிகரமான ஒர் அறிவிப்பை வெளியிட்டு, செப்டம்பர் 2020 முதல் சுமார் ஒரு இலட்சம் முதலீட்டாளர்களுக்கு சுமார் 2348 கோடி ரூபாய் முதலீடு மற்றும் வட்டியை திருப்பித் தராமல் ஏமாற்றி உள்ளதாக புகார்கள் வந்துள்ளன.

நமது கழக ஆட்சி பொறுப்பேற்றப் பிறகுதான், அந்த புகார்களின் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து 22 பேர் எதிரிகளாக சேர்க்கப்பட்டு அவர்களில் இயக்குநர்கள், ஏஜெண்ட் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற மேனேஜிங் டைரக்டர் ராஜசேகர் மற்றும் உஷா ராஜசேகர் ஆகியோரை கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட எதிரிகள் மீது Look Out Circular வழங்கப்பட்டுள்ளது. ரொக்கம், வங்கிக் கணக்குகளில் இருந்த பணம் சுமார் 96 கோடி ரூபாய், 93 அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

இதேபோல், Hijau, IFS, Elfin, CVRS Chits, Rahat உள்ளிட்ட நிதி நிறுவனங்களும் மோசடியில் ஈடுபட்டுள்ளதால், அந்த நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கையை இந்த ஆட்சி எடுத்து இருக்கிறது. குற்றவாளிகளை கைது செய்து, அவர்களுடைய சொத்துகள் முடக்கம், வங்கிக் கணக்குகள் முடக்கம், உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு நான் உத்தரவிட்டிருக்கிறேன்.

இவற்றில் Hijau, IFS, Elfin, Rahat ஆகிய நிதி நிறுவனங்கள் எப்போது தொடங்கப்பட்டன என்றால், கடந்த அதிமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற நிதி மோசடிகளில் ஈடுபட்ட நிறுவனங்களானாலும் இந்த அரசு பொறுப்பேற்றப் பிறகு எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, IFS நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த அவையின் மூலமாக நான் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். மக்களிடம் ஆசையை தூண்டி இதுபோன்ற நிறுவனங்கள் தற்போது பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றன. ஆகவே, இத்தகைய நிதி நிறுவனங்கள் அனைத்தையும் கண்காணிக்குமாறு காவல்துறைக்கு நான் கடுமையாக உத்தரவிட்டிருக்கிறேன்.

இத்தகைய நிறுவனங்களின் மோசடியை தடுக்க முதன்முதலில் சட்டம் கொண்டுவரப்பட்டது எப்போது என்றால், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தான் என்பதையும் இந்த நேரத்தில் சொல்லி, இந்த விளக்கத்தை மாண்புமிகு உறுப்பினர்கள் வாயிலாக மற்றவர்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்’ என சட்டமன்றப் பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.