40 தொகுதிகளுக்கான நேர்காணலை நிறைவு செய்தது அதிமுக!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு அளித்தவர்களின் நேர்காணல் அதிமுக பொதுச்செயாலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று 20 தொகுதிகள் இன்று 20 தொகுதிகள் என 40 தொகுதிகளுக்கும் நிறைவு பெற்றதாக அதிமுக தலைமை…

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு அளித்தவர்களின் நேர்காணல் அதிமுக பொதுச்செயாலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று 20 தொகுதிகள் இன்று 20 தொகுதிகள் என 40 தொகுதிகளுக்கும் நிறைவு பெற்றதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளில்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ளோருக்கான நேர்காணல்,  அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் என அதிமுக அறிவித்திருந்தது.

அதன்படி 20 தொகுதிகளுக்கு நேற்று நேர்காணல் நடைபெற்று முடிந்த நிலையில்,  மீதமுள்ள 20 தொகுதிகளுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது.  பொள்ளாச்சி, திண்டுக்கல்,  கரூர்,  திருச்சி,  பெரம்பலூர்,  கடலூர்,  சிதம்பரம் (தனி),  மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி),  தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று காலையும்,  சிவகங்கை, மதுரை,  தேனி,  விருதுநகர்,  ராமநாதபுரம்,  தூத்துக்குடி,  தென்காசி,  திருநெல்வேலி, கன்னியாகுமரி,  புதுச்சேரி தொகுதிகளுக்கு இன்று மதியமும் நேர்காணல் நடைபெற்றது.

அதன்படி,  மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு அளித்தவர்களின் நேர்காணல் 40 தொகுதிகளுக்கும் நிறைவு பெற்றதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.  இந்த நேர்காணல் அதிமுக பொதுச்செயாலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.