பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற ஓபிஎஸ் மனுவை ஆவடி காவல் ஆணையரகம் நிராகரித்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று அவர் தனது ட்விட்டரில் அதிமுகவில் அராஜகப் போக்கு நிலவி வருவதாகவும், தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என பதிவிட்டிருந்தார். இதன்மூலம் ஒற்றைத் தலைமை விவகாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரிடம் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மனு அளித்திருந்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அளித்த மனுவை நிராகரித்துள்ளது ஆவடி காவல் ஆணையரகம். பொதுக்குழு கூட்டம் பொது இடத்தில் வைக்கப்பட வில்லை. தனிப்பட்ட முறையில் கல்யாண மணடபத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை தடுக்க போலீசுக்கு அதிகாரம் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழு கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு முறையாக வழங்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.







