அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிப்பதாக கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் அறிவித்தனர்.
சென்னை ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஆகியோர் கலந்துகொண்டனர். எனினும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுக்குழுவை அவைத் தலைவர் தலைமையேற்று நடத்தும் தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிய, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார். ஒ.பன்னீர்செல்வம் பேசும்போது பொதுக்குழு உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற எம்.ஜி.ஆர். பாடலைப் பாடி வரவேற்புரையாற்றினார்.
உடனே மேடையில் வந்து மைக்கைப் பிடித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக ஆவேசமடைந்தார். இதனைத் தொடர்ந்து வந்த கே.பி.முனுசாமி, பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டார்கள். அவர்கள் வைக்கும் ஒரே கோரிக்கை ஒற்றைத் தலைமை வர வேண்டும் என்பதுதான். அடுத்து எப்போது பொதுக்குழு கூட்டப்படுகிறதோ அப்போது ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்.