அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 10-ம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற திங்கட்கிழமை (10-ம் தேதி) சென்னையில் நடைபெறுவதாக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.   அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளதால், தொண்டர்கள் குழப்பத்தில்…

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற திங்கட்கிழமை (10-ம் தேதி) சென்னையில் நடைபெறுவதாக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

 

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளதால், தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுவது, மற்றும் அதிமுக தொடர்பான முடிவுகளை எடுப்பது என தற்போதைய கட்சி நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி பார்த்து வருகிறார்.

 

அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக ஒன்று சேர்ந்து இயங்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர். இதில் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரையும் இணைத்து அதிமுக செயல்படவேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு டிடிவி தினகரன் மற்றும் வி.கே.சசிகலா ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அதிமுகவின் 51-வது ஆண்டுவிழா வருகிற 17-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தற்போது மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்ட முடிவு செய்துள்ளார். வருகிற திங்கட்கிழமை (10-ம்தேதி) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், கட்சியின் ஆண்டுவிழாவை சிறப்பாக கொண்டாடுவது மற்றும் கட்சியின் நிலைபாடுகள், திமுக அரசின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் கருத்து மற்றும் கட்சியில் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா ஆகியோரை சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.