அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல், நாளை நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த 3ஆம் தேதி தொடங்கிய நிலையில், 252 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெயரிலயே அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைந்ததும், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் போட்டியின்றி தேர்வாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க கோரி, சில நாட்களுக்கு முன் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது
இந்நிலையில், அதிமுக உறுப்பினரான ஜெயச்சந்திரன் சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கை, பிற்பகல் 2.15 மணி அளவில் விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்தால் விசாரிப்பதாக பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.








