முக்கியச் செய்திகள் சினிமா

எப்படி இருக்கிறது ‘bachelor’ ?: திரைவிமர்சனம்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘bachelor’. ஆண்கள் உலகத்தின் எதார்த்தத்தை நெருக்கமாக பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம்.

பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும் ஜி.வி.பிரகாஷ், முதலில் நண்பர்களுடன் அறையில் தங்கிறார். மதுபானம் வாங்கச்செல்லும் போது ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் நிம்மிக்கு விபத்து ஏற்படுகிறது. இதை காரணமாக வைத்து நிம்மியின் காதலி அவரை தனது வீட்டுக்கு அழைத்து செல்கிறார். இதை பார்த்து வெறுப்பாகும் ஜி.வி.பிரகாஷ், அந்த வீட்டிற்கே செல்கிறார். அப்போது அங்கு கதாநாயகி சுப்புவை பார்க்கிறார். அவர் மீது ஈர்ப்பு மேலிடவே அவரோடு நெருங்கி பழக வாய்ப்பை எதிர்பார்க்கிறார். இது அடுத்தகட்டத்திற்கு இட்டுச்செல்ல, இருவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். இதனால் சுப்பு கர்பமாகிறார்.

உறவினர் குழந்தையின் காது குத்து விழாவிற்காக வீட்டுக்கு செல்லும் ஜி.விக்கு, சுப்பு கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி தெரிந்ததும் குழந்தையை கலைக்க வேண்டும் என்று ஜி.வி சொல்கிறார். ஆனால் அதற்கு சுப்பு மறுப்பு தெரிவிக்க, இருவருக்கும் பிரச்னை பெரிதாகிறது. ஒருவழியாக கருக்கலைப்புக்கு சம்மதம் தெரிவித்துவிட்டு சென்னையில் இருக்கும் தனது வீட்டுக்கு தப்பிச் செல்லும் சுப்பு, வழக்கறிஞரை சந்தித்து ஜி.வி மீது வழக்கு பதிவு செய்கிறார். தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால் ஜி.வி என்ன நிலைக்கு தள்ளப்படுகிறார். சுப்புவும் ஜி.வியும் ஒன்றாக இணைகிறார்களா என்பது மீதிக் கதை.

ஆண்களின் உலகை மிகவும் சுவாரஸ்யமாக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பதிவு செய்திருக்கிறார். ஒரு பியர் பாட்டில் உடைந்தால் அது எவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தும், ஆண்கள் ஒன்றாக இருந்தால் பேசும் விஷயங்கள் என இப்படியாக படம் நகர்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது. சென்னை, பெங்களூர், கோவை,பாண்டிச்சேரி என்று படம் நகரும்போது, அதன் காட்சிகள் மிகவும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மழை, பேச்சுலர்கள் தங்கும் அறை போன்று எல்லா இடங்களில் ஒளிப்பதிவு அட்டகாசம்.

படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜி.வி.பிரகாஷ் ஆண்மை இல்லாதவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். இந்த பகுதி பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாக இருந்தாலும், ‘ஆண்மை’ என்ற பிம்பத்தை ஒரு நகைச்சுவையான தொனியில் இயக்குநர் கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஆண் – பெண் உறவு பற்றி தெளிவாக பேசிய திரைப்படம் மிகவும் குறைவே. இத்திரைப்படமும் இந்த உரையாடலை முழுமையாக நிகழ்த்தாமல் வெறும் முரண்களை மட்டும் பேசி செல்கிறது.

காதல் இல்லைதானே என்று கதாநாயகி கேட்பதும், “உன்னைப்போல் கிராமத்தில் இருந்து வரும் பசங்க இந்த உறவை ரொமாண்டிசைஸ் செய்வார்கள்” என்று சொல்வதன் மூலம் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் கதாநாயகியும் இல்லை என்பதும், ஆனால் கர்ப்பமான பிறகு அவரே திருமணம் செய்துகொள்ள சொல்வதும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஒரு திருமண அமைப்பு முறையில் பெண்களுக்கு இருக்கும் சிக்கலை படம் பேசவே இல்லை. அதுபோலவே ஒரு ஆணுக்கு இருக்கும் சிக்கலையும் படம் பேச தவறியிருக்கிறது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும்போது அதனால் ஏற்படும் சிக்கலையும் படம் பேசவில்லை.

படத்தில் பக்ஸாக நடித்திருக்கும் பகவதி பெருமாள், ஜிவி பிரகாஷின் உறவினராக வரும் முனீஷ்காந்த் ஆகியோரின் நடிப்பு அட்டகாசம். கதாபாத்திரத்திற்கு அப்படியே ஜீ.வி பிரகாஷ் பொருந்திப்போகும் அளவிற்கு நடித்திருக்கிறார். சுப்புவாக நடித்திருக்கும் திவ்ய பாரதியும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாம் எதிர்பார்க்காத நேரத்தில் இயக்குநர் மிஷ்கின் வருவது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. படத்திற்கு இசை மேலும் பலம் சேர்கிறது. ஆண்மை பற்றிய கேள்வியை நம்மிடம் அழுத்தமாக எழுப்பிருப்பதால் இத்திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

-வாசுகி 

Advertisement:
SHARE

Related posts

11 ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 155 பேர் மீது வழக்குப்பதிவு

Gayathri Venkatesan

சட்டப்பேரவை முன்னவராக அமைச்சர் துரைமுருகன் தேர்வு

Halley Karthik

’இன்னுயிர் காப்போம்’ திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Ezhilarasan