நூல் விலையேற்றம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், பாமக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
சட்டப்பேரவையில் நூல் விலையேற்றம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது பேசிய அதிமுக எம்எல்ஏ தங்கமணி, விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பை அளிக்கும் கைத்தறித்துறையில் நூல் விலையேற்றதால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
செஸ் வரி குறைப்பு முதலாளிக்குத்தான் லாபம் என்றும், தொழிலாளிக்கு லாபமில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும், நூல் விலையேற்றத்தால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டடுள்ளதாக கூறிய அவர், மில் அதிபர்களை அழைத்து பேச வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, நூல் விலை குறித்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாக கூறினார். மேலும், மாநில அரசு அனுப்பியுள்ள கடிதத்திற்கு மத்திய நிதியமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பருத்தி உற்பத்தி வட மாநிலத்திலேயே அதிக அளவு நடைபெறுவதை சுட்டிக்காட்டினார். பஞ்சு விலையேற்றத்தினால் நூலின் விலை அதிகரித்துள்ளதாக கூறிய அமைச்சர், ஜவுளி தொழிலாளர்களின் நலனில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை காட்டி வருவதாக தெரிவித்தார்.
மேலும், நூல் விலை உயர்வை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.







