அதிமுக வழக்கு – எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை!

எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சூர்யமூர்த்தி சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து, அதிமுக உறுப்பினர் எனக் கூறி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, உரிமையியல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சூரியமூர்த்தி, அதிமுக உறுப்பினரே அல்ல எனவும், உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது எனவும் தெரிவித்தார். எனவே, உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும், வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த நீதிபதி மனு குறித்து சூர்ய மூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.