பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகி வரும் நிர்வாகிகள், அதிமுகவில் சேர்ந்து வருகின்றனர். இதையடுத்து இரு கட்சியினரிடையே கருத்து மோதலும் உருவாக்கியுள்ளது. இது குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அதிமுக பெரிய கட்சி, ஆகையால் அந்த கட்சி தலைமையில்தான் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை சந்திப்போம் என்றார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. வரும் மக்களவைத் தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்றார் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. இதெல்லாம் போன மாசம்…. இப்ப இல்ல என்பது போல், கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகளால், இந்த கூட்டணி தொடருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக, பாரதிய ஜனதாக் கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா உள்ளிட்டோர் ஏற்கனவே விலகினாலும் வேறு எந்த கட்சியிலும் தற்போது வரை சேரவில்லை. திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன், கடந்த மாதம் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகிய பாஜக தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் நிர்மல்குமார் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி, விளக்க கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்,
’கட்சித் தலைமை மீது தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். இருக்கும் தலைவர்களை தக்க வைத்துக் கொள்ள முடியாமல், அதிமுகவை விமர்சிப்பது சிறுபிள்ளைத்தனம்…’ என்றும் தெரிவித்துள்ளார் நிர்மல்குமார். அவரைத்தொடர்ந்து, ஐ.டி.விங் மாநிலத் செயலாளர் திலிப் கண்ணன் பாஜகவில் இருந்து விலகினார். இவருடன் ஓபிசி அணி மாநிலச் செயலாளர் ஜோதி உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்தனர். மேலும் சிலரும் பாஜகவில் இருந்து விலகுவார்கள். அவர்கள் விரும்பினால் அதிமுகவில் இணைவார்கள் என்கிறார் நிர்மல்குமார்.
இது ஒருபுறமிருக்க, விலகிச் சென்றவர்களை மட்டுமின்றி அதிமுகவையும் விமர்ச்சித்துள்ளார் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன்மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி. குறிப்பாக கொங்கு மண்டலம் எங்க கோட்டை என்றவர்கள் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுள்ளனர், இது அவர்களுக்கு அங்கு செல்லாக்கு இல்லை என்பதையே காட்டுகிறது. தமிழ்நாட்டின் ஒரே எதிர்காலம் பாஜகதான் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஈரோடு கிழக்கில் மக்களை விலை கொடுத்து வாங்கிய இருபெரும் திராவிட இயக்கங்கள் ஜனநாயகம் குறித்து பேசலாமா? என்று அதிமுகவையும் சேர்த்து விமர்சித்துள்ளார்.
அதிமுக நிர்வாகிகள் கொந்தளிப்பு :
பாஜகவின் இந்த விமர்சனத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். அதிமுக ஐ.டி விங் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலர், பாஜகவிற்கும் மாநிலத் தலைமைக்கு எதிரான கருத்துக்களை தங்களது சமூக வலைதளப் பக்கங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். வார்த்தைப் போர் வலுத்து, உருவபொம்மை எரிப்பு வரை நீண்டுள்ளது.
இது போல் செய்யக்கூடாது என்று அண்ணாமலை கண்டித்துள்ளார். ஆனாலும், ’முதிச்சியில்லாத அரைவேக்காடுகளின் அரசியல் இப்படித்தான் இருக்கும்’ என்று விமர்சனம் செய்துள்ளார் அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேள். 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணியை கட்டமைக்க தேசியக் கட்சிகள் தொடங்கி விட்ட நிலையில், இது போன்ற நிகழ்வுகள், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விரிசல் பிளவாகி விடும் வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.
முன்னாள் எம்.எல்.ஏக்கள் நிலக்கோட்டை அன்பழகன், சோழவந்தான் மாணிக்கம் உள்ளிட்டோர் ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மேலும் சிலரும் பாஜகவிற்கு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், ’ஜெயலலிதா போல் முடிவு எடுப்பேன். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு’ என்று அண்ணாமலை சொன்ன அடுத்த நாளும் பாஜகவில் இருந்து விலகி மேலும் சிலர் அதிமுகவில் சேர்ந்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் ‘அதிமுக கண்ணாடி அல்ல. சமுத்திரம். அதிமுக மீது வீசப்படும் கற்கள் காணாமல் போய்விடும். ஜெயலலிதா போன்ற தலைவர் யாரும் இல்லை. அவர் போல் இனி பிறக்கப்போவதில்லை’ என்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
மேலும், பாஜக இருக்கும் அணிக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்பதால், அக்கட்சியை அதிமுக தவிர்க்கிறது. அதை ஈரோடு கிழக்கில் பார்க்கவும் முடிந்தது. எனவே அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அதிரடி அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
அதிமுக – பாஜக – தனி நபர் மோதலா…? இரு கட்சிகளின் ஊடலா ? இதனால் கூட்டணி கணக்கு மாறுமா? விரைவில் விடை தெரியும்… .
இந்த செய்தி குறித்த வீடியோவை காண..








