அகமதாபாத் விமான விபத்து – 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

குஜராத் விமான விபத்தில் 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் சில நிமிடங்களில் தரையில் விழுந்து விபத்திற்குள்ளானது. அந்த விமானம் பிஜே மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் விழுந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்தனர். அதே சமயம், விமான விபத்தில் விடுதியில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒருவர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடல்களை அடையாளம் காண விமான உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இதுவரை 87 பயணிகளின் டிஎன்ஏ மாதிரிகள் உறவினர்களுடன் பொருந்தியுள்ளதாகவும், 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பலர் குஜராத்தின் ஜுனாகத், பாவ்நகர், கேதா, மெஹ்சானா மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.