டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு பாஜக தயாராகி வரும் நிலையில் இந்த முக்கிய கூட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த 1998ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இமாச்சல் பிரதேசத்திலும், தொகுதிவரையரை பணிகள் நிறைவடைந்ததும் ஜம்மு காஷ்மீரிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டும் கர்நாடகா, தெலங்கானா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, நாகாலாந்து, மிசோராம், மேகாலயா ஆகிய 9 மாநிலங்களில் சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவடைகிறது. எனவே அந்த 9 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் மொத்தம் 12 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களை எதிர்கொண்டு, 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் அரசியல் கட்சிகள் உள்ளன. குறிப்பாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு அதிக சவால்கள் அடுத்து வரும் ஒன்றரை வருடங்களில் காத்திருக்கின்றன.
இந்நிலையில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும், நாடாளுமன்ற தேர்தல்களை எதிர்கொள்ள தற்போதே பாஜக தீவிரமாக தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெற்ற வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அம்மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பது மற்றும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை மேலும் எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது என்பது குறித்து முதலமைச்சர்களுக்கும், துணை முதலமைச்சர்களுக்கும் பிரதமர் மோடி அறவுரைகள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-எஸ்.இலட்சுமணன்








