‘அக்னிபாத்‘ திட்டம் குறித்து நீதிமன்றம் எந்த முடிவை எடுக்கும் முன்பு தங்களது விருப்பத்தை கேட்க வேண்டும் என மத்திய அரசு உச்சநீதமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
17.5 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபாத் (அக்னிபாதை) என்றும் பெயரிடப்பட்டது.
ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த சூழலில் முப்படைகளின் தளபதிகளையும் பிரதமர் மோடி இன்று சந்தித்து கலந்துரையாடுகிறார். நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் ஏறத்தாழ 600 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிரான 3 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் மீதான முடிவுகள் மேற்கொள்வதற்கு முன்ன தங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என மத்திய அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.







