ஆகஸ்டு 1ம் தேதி ஓபிஎஸ் உடன் இணைந்து போராட்டம் நடத்த உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி அமமுக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது..
” நெய்வேலி விவகாரத்தில் ஸ்டாலின் ஹிட்லர் போல் செயல்படுகிறார். நெய்வேலி சம்பவத்தை பார்த்து நீதிபதியே கண்ணீர் வடித்து விட்டார். எடப்பாடி பழனிச்சாமிக்கு சற்றும் சளைத்தவர் இல்லை என்று ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி வரும் ஆக்ஸ்ட்1 ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒபிஎஸ் உடன் இணைந்து போராட்டம் நடத்த இருக்கிறோம்.
தேர்தலுக்கு முன் கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தேர்தலுக்கு பின் வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து விட்டார். பாராளுமன்ற தேர்தலுக்கு பின் எடப்பாடி தலைமையிலான அதிமுக அணி நெல்லிக்காய் மூட்டை போல் சிதறி போய்விடும்.
கூட்டணி யாருடன் வைப்பது என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்.ஆனால் அமமுக தொண்டர்களுக்கு யார் தேர்தலில் ஜெயிக்க கூடாது என்பது தெரியும்.அதிமுக கட்சி கொடி சின்னம் அனைத்தும் போலிகள் கைகள் சிக்கியுள்ளது. அதை மீட்டெடுத்தே ஆக வேண்டும் “ என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.







