காபூல் பிரிமியர் லீக் போட்டிகளில் செதிகுல்லா அடல் ஒரே ஓவரில் 48 ரன்களை எடுத்து அசத்தினார். இதன்மூலம் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் அவர் இணைந்தார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஐபிஎல் போல காபூல் பிரிமியர் லீக் என்ற பெயரில் உள்ளூர் 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த காபூல் பிரிமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஷகீன் ஹண்டர்ஸ் மற்றும் அபாஸின் டிஃபெண்டர்ஸ் அணிகள், ஆப்கானிஸ்தானின் அயோபி கிரிக்கெட் மைதானத்தில் மோதிக்கொண்டன.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஷகீன் ஹண்டர்ஸ் அணியைச் சேர்ந்த செதிகுல்லா அடல் 56 பந்துகளில் 118 ரன்கள் விளாசி அசத்தினார். பின்னர் ஆட்டத்தின் 19வது ஓவரை வீச அபாஸின் டிஃபெண்டர்ஸ் அணியிலிருந்து அமீர் சசாய் வந்தார். இந்த 19வது ஓவரில் தான் அந்த அதிசயம் நடந்தது. ஒரு ஓவரில் 48 ரன்கள் என்றால் அனைவருமே ஒரு நிமிடம் விரல் விட்டு சிக்ஸர்களை எண்ணத்தொடங்குவார்கள்.
முதல் பந்தை அமீர் சசாய் நோபாலாக வீச அதனை செதிகுல்லா சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அதன்பின் வீசப்பட்ட பந்து, அகலப் பந்தாக அதுவும் பவுண்டரிக்கு சென்று 5 ரன்கள் ஆனது. தொடர்ந்து சசாய் வீசிய 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி அசத்தினார் அடல். சசாய் வீசிய அந்த ஓவரில் மட்டும் ஷகீன் ஹண்டர்ஸ் அணிக்கு 48 ரன்கள் கிடைத்தது.
செதிகுல்லா அடல் இதன்மூலம் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் இணைந்தார். அவர் சசாய் வீசிய நோபாலில் அடித்த சிக்ஸரையும் சேர்த்து மொத்தமாக 7 சிக்ஸர்கள் விளாசினார். இதன்மூலம் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.







