மதுபானங்கள் குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயதை டெல்லி அரசு 25-ல் இருந்து 21 ஆக குறைத்துள்ளது.
மதுபானங்கள் பருகுவதற்கான சட்டப்பூர்வ வயதை டெல்லி அரசு 21 ஆக குறைத்துள்ளது. இது தொடர்பாக டெல்லி துனை முதல்வர் மனிஷா சிஸோடியா கூறுகையில் ‘அரசு சார்ப்பில் இனி புதிதாக எந்த மதுபானக் கடைகளும் திறக்கப்படாது. இப்போது மாற்றப்பட்டிருக்கும் புதிய வழிமுறைகளால் டெல்லியில் உள்ள மதுபான மாஃபியாக்கள் முற்றிலுமாக துடைத்தெரியப்படும். டெல்லியில் உள்ள 60 சதவிகித மதுபானக் கடைகள் அரசால் நடத்தப்படுகிறது. டெல்லியில் மொத்தம் 850 மதுக்கடைகளை அரசு நடத்துகிறது

ஆனால் மதுபான மாஃபியாக்கள் 2000க்கும் அதிகமான மதுக்கடையை நடத்துகின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படவிருந்த 7 லட்சத்திற்கும் அதிகமான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1939 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லா இடங்களிலும் சமமான அளவில் மதுபானக் கடைகள் இருக்கிறதா ? என்பதை அரசு உறுதி செய்யும். இதனால் மதுபான மாஃபியாக்கள் முழுமையாக வியாபாரத்திலிருந்து நீக்கப்படுவர். இதன் மூலம் 20 சதவிகிதம் வருவாய் அரசுக்குக் கிடைக்கும்” என்றார்.
மேலும் இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் ‘புதிதாக மாற்றப்பட்டிருக்கும் வழிமுறையால் டெல்லியில் மதுபான மாஃபியாக்கள் துடைத்தெறியப்படுவர். புதிதாக மாற்றப்பட்டிருக்கும் வழிமுறையிலிருந்து மக்களைத் திசைதிருப்ப இந்த மாஃபியாகள் எதையும் செய்வார்கள். கல்வி, சுகாதாரம், நீர் போன்றவற்றில் கொள்ளை லாபம் ஈட்டும் மாஃபியாக்களின் ஆட்டத்தை டெல்லி அரசு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
மதுபான கடைகள் சர்வதேச தரத்தில்தான் கட்டமைக்கப் பட வேண்டும் என்றும் கடையின் வாசல் சாலையை நோக்கியவாறு இருக்கக்கூடாது என்றும் இந்த வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிப்பவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாதவாறு கடை உரிமையாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.







