அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை என்பதால், கிராம மக்கள் தாங்களே இணைந்து சாலை அமைத்த சம்பவம் ஜார்கண்டில் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தில் உள்ள பல்சேரா கிராமம். இந்த கிராமத்துக்கு சரியான சாலை வசதி இல்லை. இதனால், ஆத்திர, அவசரத்திற்கு பக்கத்து நகரத்துக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மழைக்காலத்தில் கிராமத்தில் இருந்து வெளியூர் செல்வதற்கு கடும் அவஸ்தையை எதிர்கொண்டு வந்துள்ளனர். மாணவ, மாணவியர் பள்ளிகளுக்குச் செல்வதற்கும் அவசரத்துக்கு மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கும் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து அரசுக்கும் அமைச்சர்களுக்கும் மனுக்கள் அளித்தும் எந்தவிதமான பதிலும் இல்லை. தொடர்ந்து மனு அளித்தும் கோரிக்கை நிறைவேற்றப் படாததால், கிராமத்தினர் விரக்தி அடைந்தனர்.
அரசு கண்டுகொள்ளவில்லை என்பதால், தாங்களே சாலையை அமைக்க முடிவு செய்த னர். அதன்படி, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டைச் சேர்ந்தவர்களும் இதற்கு தங்களால் முடிந்த உதவியை செய்தனர். சிலர் பணம் கொடுத்தும் சிலர் சம்பளம் இன்றி வேலை செய்யவும் களத்தில் இறங்கினர். இதையடுத்து மளமளவென நடந்த வேலையை அடுத்து சாலை தயாரானது.
இதுபற்றி செய்தி வெளியானதும் தொகுதி எம்.எல்.ஏவின் பிரதிநிதி சிஷில் போத்ரா வந்து பார்த்தார். அவர், எம்.எல்.ஏவிடம் இதுபற்றி தெரிவிப்பதாகவும் முன்னுரிமை அடிப்படை யில் பிரச்னையை தீர்க்க அவரிடம் வலியுறுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.








