எவரெஸ்ட்-ஐ தொடர்ந்து ஐரோப்பாவின் எல்பிரஸ் மலை சிகரம் மீது ஏறி சாதனை!!! உலக சிகரங்களில் தடம் பதிக்கும் முத்தமிழ்செல்வி!

எவரெஸ்ட்-ஐ தொடர்ந்து ஐரோப்பாவின் எல்பிரஸ் மலை சிகரம் மீது ஏறி சாதனை படைத்திருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த முத்தமிழ்செல்வி. விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியைச் சேர்ந்த நாராயணன்-மூர்த்தியம்மாளின் மகள் முத்தமிழ்செல்வி (33). கடலூரில் படித்து முடித்து, திருமணமாகி…

எவரெஸ்ட்-ஐ தொடர்ந்து ஐரோப்பாவின் எல்பிரஸ் மலை சிகரம் மீது ஏறி சாதனை படைத்திருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த முத்தமிழ்செல்வி.

விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியைச் சேர்ந்த நாராயணன்-மூர்த்தியம்மாளின் மகள் முத்தமிழ்செல்வி (33). கடலூரில் படித்து முடித்து, திருமணமாகி தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

ஜப்பானிய மொழி பெயர்ப்பாளராகவும், தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வரும் முத்தமிழ்செல்வி, கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகளிர் தினத்தையொட்டி, திருப்பெரும்புதூர் அருகேயுள்ள 155 அடி உயர மலை உச்சியிலிருந்து கண்களை கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டு 58 விநாடிகளில் கீழே இறங்கி தனது முதல் சாதனையை பதிவு செய்தார்.

இதனை அடுத்து , 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இமாச்சல பிரதேசத்தின் குலாங் கிராமத்தின் மலை உச்சியிலிருந்து மூத்த மகள் தக்சாவுடன் (12), இளைய மகள் வித்திஷாவை (9) முதுகில் கட்டிக்கொண்டு 165 அடி உயரத்தை 55 விநாடிகளில் இறங்கினார். அப்போது மூவரும் கறுப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு இந்த சாதனையை படைத்தனர்.

தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று சென்னை வண்டலூர் அருகே உள்ள மண்ணிவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் குதிரை மீது அமர்ந்து இலக்கில் துல்லியமாக 1,389 அம்புகள் எய்து 3-வது சாதனை படைத்தார். இதையடுத்து, கடந்த மே மாதம் எவரெஸ்ட் பயணத்தை தொடங்கினார். அதையும் வெற்றிகரமாக முடித்து, எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

ஏழு கண்டங்களில் உள்ள உயரமான மலைச் சிகரங்களை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்று ஏற்கனவே அவர் கூறியிருந்த நிலையில் ஆசிய கண்டத்தின் மலை சிகரமான எவரேஸ்டை தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்தின் உயர்ந்த சிகரமான 18,510 அடி உயரம் கொண்ட எல்பிரஸ் மலை மீதும் ஏறி தற்போது சாதனை படைத்திருக்கிறார்.

எல்பிரஸ் மலை உச்சியில் இருந்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ள முத்தமிழ்செல்வி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.