மணிப்பூர் மாநில அரசு மீது தேசிய மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு! “மூன்று முறை புகார் அளித்தும் நடவடிக்கையில்லை!”

  மணிப்பூர் மாநில அரசிடம் மூன்று முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.  மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு…

 

மணிப்பூர் மாநில அரசிடம் மூன்று முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா குற்றம் சாட்டியுள்ளார். 

மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியுள்ளார்.

சுமார் 26 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றவர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 4-ம் தேதி எடுக்கப்பட்ட அந்த வீடியோ மாநிலத்தில் இணையத் தடை நீக்கப்பட்டதும் ஜூலை 19-ம் தேதியே பகிரப்பட்டு அதிச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கடந்த மூன்று மாதங்களில் 3 முறை அம்மாநில அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்றுசேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்றது தொடர்பாக ஜூன் 12-ம் தேதியே தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார் வந்தது என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக ரேகா சர்மா இவ்வாறு தெரிவித்தார்.

மணிப்பூர் சம்பவம் குறித்து தங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்று மறுத்துள்ள மகளிர் ஆணையத் தலைவர், அது குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையானதைத் தொடர்ந்து தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து, அது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், மணிப்பூர் பெண்கள் பிரச்சினை தொடர்பாக வேறு சில புகார்கள் தனக்கு வந்தது. அதுகுறித்து மூன்று முறை மணிப்பூர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் பதில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி முதல் கலவரம் மூண்டது. சுமார் 3 மாதங்களாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.