8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் திரைக்கு வரும் தல, தளபதி படங்கள்!

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும், பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப் பூர்வமாக அறிவித்தனர். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு எச். வினோத் மற்றும் அஜித் மூன்றாவது…

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும், பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப் பூர்வமாக அறிவித்தனர்.

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு எச். வினோத் மற்றும் அஜித் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்திற்குத் தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் போஸ்டர் வெளியானது.

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் இப்படத்தின் படப்பிடிப்புக்காக பாங்காக் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ‘துணிவு’ படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் படப்பிடிப்புகளே இன்னும் முடியாததால், இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக நடிகரும், திரைப்பட விநியோகஸ்தருமான ஆர்.கே.சுரேஷ் தனது டிவிட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.

இதனிடையே, வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், துணிவு திரைப்படத்தின் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் வீரம் படமும், விஜய்யின் ஜில்லா படமும் வெளியான நிலையில், கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜித், விஜய் படங்கள் திரையரங்குகளில் ஒன்றாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அ.மாரித்தங்கம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.