டி20 உலகக்கோப்பை : சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.   ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல்…

டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.  

ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று முடிவடைந்தது.  மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் தற்போது 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில்  இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.  இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.  அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 60 ரன்களும்,  ஜத்ரான் 51 ரன்களும் எடுத்தனர்.  ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும்,  ஜாம்பா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து  விக்கெட்டுகளை இழந்தது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் ரன் எதுவும் எடுக்காமலும்,  வார்னர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  இவர்களை அடுத்து களமிறங்கிய மார்ஷ் 12 ரன்களிலும்,  ஸ்டோய்னிஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

மேக்ஸ்வெல் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தார்.  மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.  அரைசதம் அடித்த மேக்ஸ்வெல் 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.  ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 127 ரன்கள் ஆல் அவுட் ஆனது.  இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.  ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பாடின் நைப் 4 விக்கெட்டுகளையும்,  நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.