இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கவிருக்கும் உதய் உமேஷ் லலித் பற்றிய விவரங்களை இப்போது காணலாம்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக உதய் உமேஷ் லலித் கொலிஜியம் பரிந்துரைத்தது.
இதையடுத்து உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் 1957ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பிறந்தவர். 1983ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய லலித், 1985ம் ஆண்டு வரை பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
பின்னர் 1986ஆம் ஆண்டு முதல் அவர் தனது வழக்கறிஞர் பணியை டெல்லிக்கு மாற்றிக் கொண்டார். 2004 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பல்வேறு விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனை கூறும் வழக்கறிஞர் பொறுப்பையும் வகித்துள்ளார். உச்சநீதிமன்ற ஆணைப்படி 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐயின் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
உச்சநீதிமன்ற சட்டப் பணிகள் கமிட்டியில் இரண்டு முறை உறுப்பினராக இருந்துள்ளார்.
2014ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக லலித் நியமிக்கப்பட்டார். 2017ம் ஆண்டு முத்தலாக் முறைக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அமர்வில் நீதிபதி லலித் அங்கம் வகித்தார்.
நீதிபதி லலித் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் மூலமே முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டது. நாளை உச்சநீதிமன்ற தலைமையாக பொறுப்பேற்கும் லலித் இவ்வாண்டு நவம்பர் 8ம் தேதி அப்பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.







