மாநகர பேருந்துகளின் 2 பக்கங்களிலும் விளம்பரம்- போக்குவரத்துறை

மாநகர பேருந்துகளில் 2 பக்கங்களிலும், இருக்கைகளின் பின்புறங்களிலும் விளம்பரம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது மாநகர பேருந்துகளின் பின்புறத்திலும்,…

மாநகர பேருந்துகளில் 2 பக்கங்களிலும், இருக்கைகளின் பின்புறங்களிலும் விளம்பரம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது மாநகர பேருந்துகளின் பின்புறத்திலும், டிரைவர் இருக்கையின் பின்புறத்திலும் மட்டும் விளம்பரம் செய்ய அனுமதி உள்ளது. இதன் மூலம் குறைந்த அளவிலேயே வருவாய் கிடைப்பதால் மற்ற பகுதிகளிலும் விளம்பரம் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது.

அதன்படி பேருந்தின் 2 பக்கமும், தனியார் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் அரசு பேருந்துகளில் 2 பக்கவாட்டிலும் விளம்பரம் செய்யப்படுகிறது. அது போல சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பரம் செய்வதன் மூலம் வருவாயை மேலும் அதிகரிக்க முடியும் என கருதுகிறது.

இதையடுத்து முதற்கட்டமாக 3000 பேருந்துகளில் விளம்பரம் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது தவிர 500 பேருந்துகளில் பயணிகள் இருக்கையின் பின்புறம் ‘ஏ4’ அளவில் விளம்பரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இருக்கைகளில் விளம்பரம் செய்யும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதற்கு உள்ள வரவேற்பை தொடர்ந்து மேலும் 1000 பேருந்துகளில் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏ.சி. பஸ், 2 மகளிர் பேருந்துகளில் பக்கவாட்டில் அரசு நிறுவனங்களின் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இது போல தனியார் விளம்பரங்களும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியிடும் போது இடையிடையே தனியார் தொழில் சார்ந்த விளம்பரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக போக்குவரத்துறையின் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியாக அரசு பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.