கலப்பட டீசல் : பெட்ரோல் பங்க் ரூ. 8.19 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

கலப்பட டீசலால் கார் இஞ்சின் பழுது காரணமாக ஏற்பட்ட செலவுத்தொகை 8 லட்சம் ரூபாயை உரிமையாளருக்கு வழங்கும்படி, பெட்ரோல் பங்க்-க்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அஜய் பாஸ்கர், கடந்த 2022ம் ஆண்டு சேலம் தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்-கில் காருக்கு டீசல் நிரப்பியுள்ளார்.

சிறிது தூரம் சென்ற நிலையில் திடீரென என்ஜீன் பழுதாகி, 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து காரை சென்னைக்கு கொண்டு வந்து பழுது பார்த்ததாகவும், கலப்பட டீசல் காரணமாகவே என்ஜின் பழுதாகி உள்ளதால், பழுதை சரிசெய்ய செலவிட்ட  8 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை வழங்கும்படி சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்-க்கு உத்தரவிடக் கோரி சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், காரை பழுது பார்ப்பதற்கான செலவு தொகை 8 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என பெட்ரோல் பங்க்-க்கு உத்தரவிட்டுள்ளது. இதுதவிர இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுக்காக 2 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.