இபிஎஸ் வசம் அதிமுக: ஓபிஎஸ் முன்பு தற்போதும் எஞ்சியிருக்கும் வாய்ப்புகள் என்ன?

அதிமுகவில் அதிகாரம் யாருக்கு? என்ற போட்டியில் வெற்றி பெற்று அக்கட்சியின் ஒற்றை தலைமையாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவரை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக்கிய ஜூலை 11ந்தேதி பொதுக்குழு செல்லும்…

அதிமுகவில் அதிகாரம் யாருக்கு? என்ற போட்டியில் வெற்றி பெற்று அக்கட்சியின் ஒற்றை தலைமையாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவரை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக்கிய ஜூலை 11ந்தேதி பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் அளித்த உத்தரவை தற்போது உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனால் அதே நேரம் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை இதோடு முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டதா?,  இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருப்பது இறுதி வெற்றியா? அல்லது ஏதேனும் தொக்கி நிற்கிறதா என்கிற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து வெற்றிகள் வந்தபோதெல்லாம் மனம் தளராது தனது முயற்சிகளை  தொடர்ந்து,  சட்டப்போராட்டங்களில் ஈடுபட்டுவந்தார் ஓபிஎஸ். அதே போல் மீண்டும் அவர் தனது சட்டப் போராட்டங்களையும்,  முயற்சிகளையும் தொடர்வதற்கு ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது. 

மேற்கண்ட கேள்விக்கு முதலில் உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பின் சாராம்சங்களை உற்றுநோக்குவதன் மூலம் பதில் தேட தொடங்குவோம்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

கடந்த ஆண்டு ஜூலை 11ந்தேதி இபிஎஸ் தரப்பினரால் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்ட விதம் சரியா, தவறா என்பதில்,  கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பையும், அந்த தீர்ப்பை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 2ந்தேதி வழங்கிய தீர்ப்பையும் ஒப்பிட்டு பார்த்து ஆராய்ந்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஜூலை 11ந்தேதி  நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம்,  அதே நேரம் இருநீதிபதிகள் அமர்வு இந்த விவகாரத்தை கள யதார்த்தை உணர்ந்து சரியான முறையில் அணுகி தனது உத்தரவை வழங்கியுள்ளதாகவும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. ஜூலை 11ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பு செய்துள்ள மேல்முறையீட்டை நிராகரிப்பதற்கு கீழ்க்கண்ட காரணங்களை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

  1. அதிமுக கட்சி விதிப்படி பொதுக்குழுவை கூட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்  வழங்க வேண்டும் என்ற விதி வருடாந்திர பொதுக்குழு கூட்டத்திற்கோ, அல்லது தேவைப்படும்போது கூட்டப்படும் கூட்டத்திற்கோதான் பொருந்தும். 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவுடன் கூட்டப்படும் சிறப்பு பொதுக்குழுவிற்கு இந்த விதி பொருந்தாது.
  2. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் ஜூன் 23ந்தேதி பொதுக்குழுவைக் கூட்டியுள்ளனர். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அந்த பொதுக்குழுவில் கலந்துகொண்டுள்ளனர். அந்த பொதுக்குழுவில்தான் மொத்தம் உள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று,  ஜூலை 11ந்தேதி மீண்டும் பொதுக் குழுவை கூட்டுவதற்கான அறிவிப்பை அவைத் தலைவர் வெளியிட்டுள்ளார்.
  3. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்கிற காரணத்திற்காக ஜூன் 23ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நடந்த அனைத்து நடவடிக்கைகளையும் நிராகரித்துவிடமுடியாது.
  4. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்  இணைந்து செயல்பட முடியாத சூழ்நிவை ஏற்படும்போது, கட்சியின் செயல்பாடு முடங்கும் வேளையில், கட்சியை செயல்படு தீர்வை நோக்கி நகர்த்துவதற்காக  பொதுக்குழு உறுப்பினர்களும், அவைத் தலைவரும் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை சட்டவிரோதமாக கருதமுடியாது. அந்த கருத்தின் அடிப்படையில் பார்க்கும்போது,  ஜூலை 11ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டத்தை முறைகேடாக கூட்டப்பட்ட கூட்டமாக சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தனது உத்தரவில் கூறியதை ஏற்க முடியாது
  5. இது போன்ற அரசியல் கட்சியின் உள்விவகாரங்களில், இடைக்கால நிவாரணம் கோரி தொடரப்படும் மனுக்களை விசாரிக்கும்போது பிரச்சனையின் மையம் என்ன என்பதிலிருந்து விலகி தொழில்நுட்ப ரீதியிலான தவறுகளையும், குறைகளையும் மட்டுமே கருத்தில்கொள்ளக்கூடாது என்பது எங்கள் கருத்து.
  6.  ஜூலை 11ந்தேதி பொதுக்குழு முடிவின் விளைவுகள் என்னவாக இருக்கு என்பதின் அடிப்படையில் மனுதாரர்களுக்கு (ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள்) சரிசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்று கருதி ஜூலை 11ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என தனி நீதிபதி அறிவித்தது ஏற்புடையது அல்லது.
  7. தனிநீதிபதியின் இந்த உத்தரவு அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்பான வழக்குகள் முடியும் வரை அமலில் இருந்தால் அது இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அந்த கட்சியின் நலனை கடுமையாக பாதிக்கும்.
  8.  கடந்த 2017ம் ஆண்டு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் (சசிகலா) கட்சியில் செயல்படமுடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவைக் கூட்டியுள்ளனர். தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாத நிலையில் அவைத் தலைவர் ஜூலை 11ந்தேதி பொதுக்குழு கூடும் என அறிவித்ததையும், தலைமைக் கழக நிர்வாகிகள் அதற்கான நோட்டீசை அளித்ததையும் முழுவதும் முறைகேடானதாக கருத முடியாது.
  9. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து கட்சியை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும்போது ஒன்றைகோடிக்கு அதிகமான தொண்டர் பலம் உள்ள கட்சி திடீரென தனது செயல்படும்முறையை எப்படி மாற்றிக்கொள்ள முடியும்? என தனி நீதிபதி தனது உத்தரவில் எழுப்பியிருந்த கேள்வி நீதியின் கொள்கைகளுக்கு முரணானது.  ஜூலை 11ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லுமா, செல்லாதா என்பதே வழக்கின் அடிப்படை கேள்வியாக இருக்கும் நிலையில் இந்த கருத்து அதிலிருந்து பெருமளவு விலகி செல்கிறது.
  10. எதையும் சாத்தியமற்ற நிலைக்கு கொண்டுசெல்வது சட்டத்தின் நோக்கம் அல்ல. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், இணைந்துதான் பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்கிற தனி நீதிபதியின் உத்தரவு நீதியின் கொள்கைக்கு முரண்படுவதாக உள்ளது. அது கட்சியின் அடிப்படை செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும். எனவே இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு சரியான தலையீட்டை செய்துள்ளது.

என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிகள், ஜூலை 11ந்தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், சட்டப்போராட்டங்களை தொடர்வதற்கு இன்னும் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்கிற நம்பிக்கையை ஒபிஎஸ் தரப்பிற்கு அளிக்கும் வகையில் சில அம்சங்கள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன.

1.ஜூலை 11ந்தேதி கூட்டப்பட்ட பொதுக் குழு செல்லும் என்று உத்தரவிட்டாலும், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான இரு தரப்பின் கருத்துக்கள் குறித்து தாங்கள் எந்த மதிப்பீட்டையும்  செய்யவில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர். அந்த தீர்மானங்களை சட்டரீதியில் எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் திறந்தே இருப்பதாகவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

2. மேலும் தாங்கள் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு, அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முடிவுகளை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் தினேஷ் மகேஸ்வரி அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த இரு அம்சங்களின் அடிப்படையிலும், அரசியல் நடவடிக்கைகள் அடிப்படையிலும் ஓபிஎஸ் தரப்பிற்கு இனி என்னென்ன வாய்ப்புகள் எஞ்சி உள்ளன என்பதை பார்ப்போம்.

ஓபிஎஸ் தரப்பிற்கு எஞ்சியுள்ள வாய்ப்புகள் 

1. ஜூலை 11ந்தேதி பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்புக்கு  எதிராக அந்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்.

2) ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியைவிட்டு நீக்கி ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவிற்கு தற்போது தடை ஏதும் இல்லை, அது அமலில்தான் இருக்கின்றது என்றாலும், அந்த தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர வாய்ப்புகள் திறந்தே உள்ளன.

3) அவ்வாறு வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு மூலம் தமது அடிப்படை உறுப்பினர் பதவியை ஓபிஎஸ் உறுதிசெய்யும் பட்சத்தில், அடுத்தக்கட்டமாக கட்சி சின்னத்திற்கும், பெயருக்கும் உரிமைகோரி, 1968ம் ஆண்டு தேர்தல் சின்ன உத்தரவு அடிப்படையில் தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம். ஆனால் அவ்வாறு முறையிடும்பட்சத்தில் அதிமுக சட்டமன்ற கட்சிக்குள்ளும், கட்சி அமைப்பிலும் பெரும்பான்மையை அவர் பெற வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் இரண்டு அமைப்பிலும் எடப்பாடி பழனிசாமிக்கே பெரும்பான்மை பலம் உள்ள நிலையில், ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிப்பாரா? என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

3. அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கலாம். அந்த வழக்குகளின் முடிவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

5. கட்சிக்கு வெளியிலிருந்துகொண்டே செயல்பட்டு கட்சிக்குள் ஆதரவை ஓ.பன்னீர்செல்வத்தால் பெருக்க முடிந்தால்,  மீண்டும் பொதுக் குழுவை கூட்டவைத்து அதில் தனது ஆதரவாளர்கள் மூலம் பலத்தை நிரூபித்து அதிமுகவிற்குள் புத்துணர்வோடு ரீஎன்ட்ரி ஆகலாம்.

என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தற்போதும் சில வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி என்னவாகும்?

ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்தே நீக்கிவிட்டதாக இபிஎஸ் தரப்பு அறிவித்தாலும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் தற்போது வரை ஓ.பன்னீர்செல்வமே உள்ளார். அந்த பதவிக்காக எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தேர்ந்தெடுத்தும் அதனை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்னும் அங்கீகரிக்கவில்லை.  இதற்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அதிமுக பொதுக்குழு வழக்கு ஒரு காரணமாக கூறப்பட்டது.  அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட  ஜூலை 11ந்தேதி பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிப்பதற்கு சபாநாயகர் அப்பாவுவிடம் இபிஎஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தலாம். ஆனால் இந்த விவகாரத்தில் சபாநாயர் என்ன முடிவு எடுக்கப்போகிறார். ஓபிஎஸ் தரப்பு அடுத்தக்கட்ட சட்டப்போராட்டங்களை மேற்கொண்டால் அதனை அவர் கருத்தில்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஓபிஎஸ் மகனும் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.பியுமான ரவீந்திரநாத் மக்களவையில் அதிமுக உறுப்பினராகவே அங்கீகரிக்கப்பட்டு வரும் நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து அந்த அங்கீகாரம் தொடருமா என்பதும்  கேள்விக் குறியாகியுள்ளது. அதிமுகவை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதால் அவரை மக்களவையில் அதிமுக உறுப்பினராக கருதக்கூடாது என ஏற்கனவே மக்களவை சபாநாயகருக்கு இபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அப்போது உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. தற்போது ஜூலை 11ந்தேதி பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது அதன்பின் ரவீந்திரநாத்  உள்ளிட்டோரை அவர் நீக்கியது உள்ளிட்டவை செல்லுபடியாகும் என்றாகியுள்ளது. இதனால் ரவீந்திரநாத்தை அதிமுக உறுப்பினராக அங்கீகரிக்கக்கூடாது என  மக்களவை சபாநாயகருக்கு இபிஎஸ் கடிதம் எழுதினால் அந்த கோரிக்கை ஏற்கப்படவே அதிகம் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

-எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.