கருத்துக் கணிப்புகளை பொருட்படுத்தாமல் தொய்வின்றி உழைக்க வேண்டுமென அதிமுகவினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஓய்வில்லாமல் நாள்தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு இன்று மடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், 2011 முதல் அதிமுக அரசு ஆற்றி வரும் பணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மகத்தான வெற்றியை தருவதற்கு மக்கள் காத்திருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் நாங்கள் சந்திக்கும் மக்கள் கூட்டம் அதையே எடுத்துக்காட்டுகிறது. அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதை எங்களது அனுபவம் உணர்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து, “ஆனால் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்பை கையில் எடுத்திருப்பதாகத் தெரிவதாகவும், கடந்த காலத்தில் எத்தனை கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் முற்றிலும் தவறாகப் போனது என்பதை நாம் அறிவோம்” என தெரிவித்துள்ளனர்.
மேலும், இப்போது கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் நடைபெறும் பொய் பிரச்சாரங்களால் மக்கள் தங்களது அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப் போவதில்லை எனவும், தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால் கூட்டணி கட்சியினரை அரவணைத்து முழு மூச்சுடன் பணியாற்றி தொடர் வெற்றிக்கு தொய்வின்றி உழைப்போம் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.







