மருத்துவப் படிப்பில் சேருவதற்கான மாணவர்களின் கல்லூரி பதிவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2023-24-ம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் ஜூலை 12-ம் தேதி வரை பெறப்பட்டன. கடந்த ஜூலை 16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
கடந்த 27-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிலையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கான மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல், மாணவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீடு ஆகஸ்ட் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறும் எனவும், ஆகஸ்ட் 6-ம் தேதி அதற்கான முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்துக் கொண்டு, ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 11-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







