நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு – நீதிபதி அல்லி உத்தரவு!

முன் ஜாமின் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா…

முன் ஜாமின் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா,  மன்சூர் அலிகான் பேச்சுக்கு சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார்.  இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பாகியது.

இதையடுத்து,  நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக நடிகையும்,  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மற்றும் நடிகை,  நடிகர்கள் சமூக வலைதளங்களில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகவும்,  நடிகை திரிஷாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில்,  நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது.

இதனைத்தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் IPC 509 – பெண்ணின் நாகரிகத்தை அவமதிக்கும் செயல் செய்தல்,  IPC 354(A) – பெண்ணின் உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

உடல் நிலை பாதிப்பால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில், நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

அங்கு,  அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தனலட்சுமி,  நடிகர் மன்சூர் அலிகானிடம் விசாரணை மேற்கொண்டார்.  இதன் பின்னர் இனி செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என கூறி விட்டு நடிகர் மன்சூர் அலிகான் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி மன்சூர் அலிகான் மனு அளித்திருந்தார்.  இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அவ்வாறு பேசவில்லை என மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நடிகை த்ரிஷா சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செயப்பட்டுள்ளது என மன்சூர் அலிகான் தரப்பு நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.   மன்சூர் அலிகானின் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.