ஆதவனை ஆய்வு செய்ய வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ”ஆதித்யா L1″ விண்கலம்!

  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ”ஆதித்யா L1” விண்கலம் திட்டமிட்டபடி நண்பகல் 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரை இறங்கி வெற்றிகரமாக…

 

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ”ஆதித்யா L1” விண்கலம் திட்டமிட்டபடி நண்பகல் 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரை இறங்கி வெற்றிகரமாக ஆய்வை மேற்கொண்டு வரும் நிலையில், சூரியனை பற்றிய ஆய்வில் இஸ்ரோ களமிறங்கியுள்ளது. புவிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனில் இருந்து எழக்கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிய பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. பெரிய அளவிலான சூரியப் புயல்கள் சூரியனின் மேல்பரப்பில் இருந்து அனைத்து திசைகளிலும் தொடர்ந்து உமிழப்படுகின்றன.

அது போன்ற சூரியப் புயல்கள் பூமியை தாக்கினால் அதனுடைய தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை ஆரம்பகட்டத்திலேயே அடையாளம் காண “ஆதித்யா எல்1” விண்கலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்குத் தொடங்கியது. பின்னர் திட்டமிட்டபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆதித்யா எல்-1 விண்கலத்தில் சோலார் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசா், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் உள்ளிட்ட ஏழு விதமான ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும். சுமார் 1,475 கிலோ எடை கொண்ட ஆதித்யா விண்கலம் அந்த இடத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

அங்கு இருந்தபடி சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்தபுலம் உள்ளிட்டவற்றை அறிவதற்கான ஆய்வுகளை ஆதித்யா விண்கலம் மேற்கொள்ளும். இந்தத் திட்டத்தின் இயக்குநராக தமிழ்நாட்டை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது. இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சோ்ந்தவர்.

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, சூரியனை ஆய்வு செய்யும் முயற்சிக்காக இதுவரை அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. ஆதித்யா எல்-1 திட்டமிட்ட இலக்கை எட்டும்பட்சத்தில் அந்த வரிசையில் இந்தியாவுக்கு தனி இடம் கிடைக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.