தமிழ்நாட்டின் அரசு பள்ளியில் பயின்று இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி தலைமைப் பொறுப்பேற்றிருப்பதால் பூரிப்பும், பெருமையை அடைந்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரை இறங்கி வெற்றிகரமாக ஆய்வை மேற்கொண்டு வரும் நிலையில், சூரியனை பற்றிய ஆய்வில் இஸ்ரோ களமிறங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இதையடுத்து, சரியான ஒரு மணி நேரம் 12 நிமிடங்களுக்குப் பின், ராக்கெட்டிலிருந்து பிரிந்து, ஆதித்யா விண்கலம், தனது தனித்தப் பயணத்தைத் தொடங்கியது. இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் செய்தியாளர்களிடையே தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்தவரும், விண்கலத்தின் திட்ட இயக்குநருமான நிகர் ஷாஜி பேசுகையில், ”ஒரு கனவு நனவானது போல் உள்ளது. ஆதித்யா L1 பிஎஸ்எல்வி மூலம் செலுத்தப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆதித்யா L1 அதன் 125 நாட்கள் நீண்ட பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
ஆதித்யா L1 திட்டத்தில் பணியமர்த்தப்பட்டவுடன், அது நாட்டிற்கும் உலக அறிவியல் சகோதரத்துவத்திற்கும் ஒரு சொத்தாக இருக்கும் என நினைத்தேன். இந்த மகத்தான வெற்றிக்கு உதவிய வல்லுநர் குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஆதித்யா விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் சூரிய தகடுகள் சரியாக வேலைசெய்யத் தொடங்கியுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நிகர் ஷாஜி -க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X பக்கத்தில் பாராட்டி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா L1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜி குறித்து அகமகிழ்ந்து பாராட்டுகிறேன். தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து சந்திரயான் முதல் ஆதித்யா வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.
இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.







