‘தேடல்’ இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாத ஒன்றாக அமைந்திருக்கும். அதில் மனிதர்கள் மட்டும் விதிவிலக்கா…? அதிலும்
தெரியாததை தெரிந்து கொள்ள மனிதர்களுக்கு மிகுந்த ஆர்வம், அந்த ஆர்வம்தான் பல ஆய்வுகளை மேற்கொண்டு அதிலும் வெற்றி காணச் செய்துள்ளது. பூமி எப்படி இயங்குகிறது என்பதில் தொடங்கி பூமியை போன்று வேறு கிரகம் இருக்கிறதா? அதில் உயிர்கள் வாழ முடியுமா? என்பது போன்ற ஆராய்ச்சியில் மனிதகுலம் தீவிரமான தேடுதலில் இறங்கியுள்ளது. தேடல் தொடங்கிய போதே அங்கு போட்டியும் தொடங்கி விட்டது எனலாம்.
பறவைக்கு இறகு போல மனிதனுக்கு வானைத் தொட விமானம்.. அதையும் தாண்டி என்ன தான் இருக்கிறது என்ற தேடல் விண்ணையும் தொட வைத்தது… ஆராய்ச்சியில், அறிவில்.. யார் சிறந்தவர்கள் யார் முதலில் என்ற போட்டி இதில் மட்டும் விதிவிலக்கல்ல. அப்படி சந்திரன், சூரியனில், செவ்வாயில் என்ன இருக்கிறது என உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. முதற்கட்டமாக ராக்கெட் ஏவி நிலாவிற்கு மனிதர்கள் பயணம் செய்வதில் இருந்த ஆர்வத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவர் முதன்முதலில் நிலவில் கால் பதிக்கிறார். அதனைத் தொடர்ந்து அதன் பின் பல நாடுகள் விண்ணிற்கு ராக்கெட் ஏவின.
இதில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் நிலாவில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இஸ்ரோ, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ. பி. ஜெ அப்துல் கலாம் தலைமையில் மயில்சாமி அண்ணாதுரை போன்ற பல விஞ்ஞானிகளின் முயற்சியில் 2008-ம் ஆண்டு அக்டோபர் 28 தேதி முதல் முறையாக சந்திரயான் 1 நிலாவிற்கு அனுப்பப்பட்டு மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. நிலவிற்குள் செல்வதற்கு 21 நாட்கள் ஆன சந்திரயான் 1 துருவ வட்டப்பகுதியில் நுழைந்து நிலாவில் தண்ணீர் இருப்பதை முதன்முதலில் கண்டறிந்து உலகையே வியப்பில் ஆழ்த்தியது.
சந்திரயான் 1 தொடர்ந்து மேலும் நிலவில் வேறு என்னவெல்லாம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள 2019 ஆண்டு சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. நிலவில் லேண்டர் தரையிறங்கும் போது நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதி சேதமடைந்ததால் சந்திரயான் 2 பெறும் தோல்வியைக் கண்டது.
ஆனால் அயராத இஸ்ரோ மீண்டும் 2023 ஜீலை 14-ம் தேதி சந்திரயான் 3 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. சந்திராயான் 3 மெதுவாக நிலவை சுற்றி வந்து ஆகஸ்ட் 23 ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. நிலவில் தென் துருவத்தில் 14 நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படும் என்பதால் பிரக்யான் ரோவர் அதனை ஆராய்ந்து சரியான நேரத்தில் லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று வரை பிரக்யான் ரோவர் தினம் ஒரு புதிய தகவல் தருவதாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவிட்டு வருகிறது. அண்மையில் பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரை படம் பிடித்ததை வெளியிட்டது இஸ்ரோ. நிலவை பற்றி தெரிந்துக் கொண்ட இந்தியா சூரியனை நோக்கி பயணிக்க தாயராகிவிட்டது.
இதற்கு முன்பாகவே அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் சூரியனை ஆய்வு செய்து வரும் நிலையில் இந்தியா நான்காவது நாடாக சூரியனில் கால் பதிக்க ஆதித்யா எல்-1 என்ற ராக்கெட் தயாராக உள்ளதாகவும் செப்டம்பர் 2-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.
அதனைத் தொடர்ந்து இஸ்ரோ மூலம் ஏவப்படவிருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனையும், பருவ நிலைகள் பற்றியும் ஆய்வு செய்து அனுப்பும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சூரியனிலிருந்து எழக்கூடிய புயல்களை முன்கூட்டியே கண்டறிய பல நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. சூரியனின் மேற்பரப்பில் இருந்து அனைத்து திசைகளிலும் புயல் உமிழ்ப்படுகிறது. சூரிய புயல் பூமியை தாக்கினால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த புயலை முன் கூட்டியே கண்டறிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியன் மற்றும் பூமியின் மையப் பகுதியில் ஏவப்படுகிறது.
ஆதித்யா எல்.1 -ல் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் சூரியனை பார்த்துக் கொண்டே இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சூரியனில் ஏற்படும் மூலக்கூறு மாற்றங்கள், வெப்பம் உருவாகும் வழிமுறைகள் மற்றும் காந்தப்புலம் குறித்து ஆய்வை கண்டறிவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
சூரியனின் காந்தப்புலன்கள் பூமியில் தொலைத் தொடர்பு , ஜிபிஎஸ் மற்றும் மின் கட்டுமானத்தை பாதிக்கக் கூடிய ஆற்றல் கொண்டதாகும். அதனால் ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனையும், சூரிய புயல்களை பற்றியும் ஆய்வு செய்து அனுப்பும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நாசாவின் பார்க்கர் விண்கலம் மட்டும் தான் இதுவரை சூரியனுக்கு மிக அருகில் ஆய்வு செய்த விண்கலமாகும். நிலவில் தென் பகுதியில் கால்பதித்த இந்தியா சூரியனை ஆராய்வதில் வெற்றி பெருமா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்…








