குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபத்னி என குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்புக் கோரி உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “ஆமாம், ராஷ்ட்ரபதியை பார்க்க உள்ளோம்; இல்லை இல்லை ராஷ்ட்ரபத்னி, அனைவருக்கும்” என தெரிவித்தார்.
அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. நேற்று மக்களவை கூடியதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆதிர் ரஞ்சனின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த அமளி காரணமாக, நாடாளுமன்றம் ஒத்திவைப்பட்டது.
பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்த பாஜக எம்பிக்கள், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தவறுதலாக அவ்வாறு பேசிவிட்டதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று கூறி இருந்தார். அதேநேரத்தில், மன்னிப்பு என்ற கேள்வியே எழவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். அதில், தங்களின் பொறுப்பு குறித்து தவறான வா்ரத்தையை தவறுதலாகக் கூறிவிட்டதாகக் கூறியுள்ளார். நாக்கு பிழன்று அவ்வாறு பேசி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும், தனது மன்னிப்பை ஏற்கும்படியும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேட்டுக்கொண்டுள்ளார்.










