“இபிஎஸ்-ஐ விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை” – நடிகை கௌதமி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை என அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி தெரிவித்துள்ளார்.

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை. அரசியலில் ஒழுங்காக கால் எடுத்து வைக்காத ஆதவ் அர்ஜுனா, இவ்வளவு வருடமாக அரசியலில் சாதித்து படிப்படியாக கட்சியை கட்டி ஒருங்கிணைத்து நான்கு ஆண்டு காலம் சிறப்பாக முதலமைச்சராக ஆட்சி புரிந்த எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவது கண்டிக்கத்தக்கது.

பெரியவர்களுக்கு மரியாதை தருவது என்பது கட்சிக்கு அப்பாற்பட்ட விஷயம். அதிமுக கூட்டணியில் த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, அது போக போக தெரியும். சரியான நேரத்தில் சரியான முடிவினை எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என நடிகை கௌதமி தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவேன். மக்களுக்கான நேர்மையான ஆட்சி நிச்சயம் அமையும் என நடிகையும், அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளருமான கௌதமி பேட்டியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.