பொதுத்தேர்வுக்கு கூடுதல் மையங்கள்; பரிந்துரைகளை அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள்…

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு கல்வியாண்டில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்குரிய புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பான கருத்துருக்களை பள்ளிகள் அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் பள்ளிகளின் கருத்துருக்களை பரிசீலனை செய்து, அப்பள்ளிகளை நேரில் பார்வையிட்டு, அதுபற்றிய கருத்துருவினை முதன்மை கல்வி அலுவலர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள இருக்கை எழுத்தர் மூலம், தேர்வுத்துறையிடம் வரும் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையின்றி பெறப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவுக்கு பின் பெறப்படும் கருத்துருக்கள் ஆகியவை கண்டிப்பாக நிராகரிக்கப்படும். மேலும், தேர்வு மையங்களாக அமைக்க அந்த பள்ளிகளுக்கு தகுதியிருப்பதை உறுதி செய்யவேண்டும். விதிகளின்படி, தேர்வு மையங்களாக பள்ளிகளை தேர்வு செய்யாத அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிடத்துக்கு பரிந்துரை செய்யப்படும். குறிப்பாக 10 கி.மீ. தூரத்துக்கு மேல் பயணம் செய்து தேர்வு எழுத தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளிலேயே புதிய தேர்வு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

2022 – 2023-ம் ஆண்டு பொதுத் தேர்வுக்கு, ஏற்கனவே தேர்வு மையமாக செயல்பட்டு வரும் பள்ளிகள், புதிய தேர்வு மையம் கோரும் பள்ளிகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வு மையமாக செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முகப்புத் தாள்கள் அச்சிடவேண்டிய சூழலில், காலம் தாழ்த்தாது குறிப்பிட்டுள்ள தேதியில் கண்டிப்பாக புதிய தேர்வு மையம் கோரும் கருத்துருக்களை சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.