அதானி விவகாரம்: நிபுணர் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

அதானி விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நிபுணர் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், முதலீட்டாளர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நெறிமுறை குழு தேவை என்பதை நீதிமன்றம்…

அதானி விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நிபுணர் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், முதலீட்டாளர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நெறிமுறை குழு தேவை என்பதை நீதிமன்றம் உணர்கிறது எனத் தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அபய் மனோகர் சப்ரே தலைமையில் குழு அமைப்பதாகவும், அந்த குழுவில் ஓ.பி.பட், நீதிபதி தேவ்தர், கே.வி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர் இடம்பெறுவார்கள் என்றும் உத்தரவிட்டது.

மேலும், தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இருந்து பொதுமக்களது பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்பதை விளக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் செபி அமைப்பு விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்றும், செபி அமைப்பு நடத்தும் விசாரணை தொடர்பான விவரங்களை இந்த நீதிமன்றத்திலும், அதேபோல நிபுணர் குழுவுக்கும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், நிபுணர் குழு அமைத்தாலும் அது இந்த முறைகேடு தொடர்பான செபியின் தனிப்பட்ட விசாரணையை பாதிக்காது. முறைகேடு புகார் தொடர்பாக செபி அமைப்பு விரிவான விசாரணை நடத்தி இரண்டு மாதத்தில் நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதிமுறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டார் அதானி.

அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பதால் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசியும், எஸ்பிஐ வங்கிக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதையும் படிக்க: திரிபுரா தேர்தல்; முதலமைச்சர் மாணிக் சாஹா வெற்றி

இந்த நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் விஷால் திவாரி, எம்.எல்.சர்மா ஆகியோர் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், ஹிண்டென்பர்க் அறிக்கை நாட்டிற்கு களங்கம் விளைவித்துள்ளதாகவும், முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கை ஒரு சதித்திட்டம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.