அதானி குழும விவகாரம்: மே 15-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

அதானி நிறுவனத்தின் மீதான குற்றசாட்டுகள் குறித்து நிபுணா்கள் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதையடுத்து வழக்கை உச்சநீதிமன்றம் மே 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில்…

அதானி நிறுவனத்தின் மீதான குற்றசாட்டுகள் குறித்து நிபுணா்கள் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதையடுத்து வழக்கை உச்சநீதிமன்றம் மே 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றி உள்ளதாகவும்,  இந்த பங்கு விலை உயர்வை காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம்  குற்றம் சாட்டியிருந்தது. மேலும் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை அதானி குடும்ப உறுப்பினர்கள் தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் அதானி குழுமம் பங்கு சந்தையில் பெரும் சரிவை கண்டது.

ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் அதானி குழும விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனிடையே, அதானி குழுமம் மீதான ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதா? என்பது குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது.

இதன்படி அதானி குழுமம் குறித்து விசாரணை நடத்தி மே 2 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி செபி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அதானி மீதான புகார்களை விசாரிக்க இன்னும் 6 மாதங்கள் வேண்டும் என உச்சநீதிமன்றத்திடம் செபி நிறுவனம் ஏற்கனவே கால அவகாசம் கேட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் “நிபுணா்கள் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத காலம் அவகாசம் வழங்குவது தற்போதைய சூழலில் முடியாத காரியம்” என்று தெரிவித்து மே 15-ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.