பிரதமர் மோடியின் ‘மன்கீ பாத்’ ( மனதின் குரல்) நிகழ்ச்சியைக் கேட்காததால் நானும் தண்டிக்கப்படுவேனா என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘மனதின் குரல்’ என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி அன்று பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழச்சி மாநிலம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை, சண்டிகரில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான, பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையத்தில், பிரதமர் மோடியின் 100-வது ‘மன்கீ பாத்’ நிகழ்ச்சி ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல்லூரியில் படிக்கும் முதலமாண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் கண்டிப்பாக இந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. கலந்து கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், முதலாமாண்டில் இருந்து 28 மாணவிகளும், மூன்றாம் ஆண்டில் இருந்து எட்டு மாணவிகளும் என மொத்தம் 36 மாணவிகள் அந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்கு கல்லூரி விடுதியை விட்டு வெளியேறக் கூடாது என தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் பிரதமரின் ‘மன்கீ பாத்’ நிகழ்ச்சியை இதுவரை நான் ஒரு முறை கூட கேட்டது இல்லை. இனி கேட்கப் போவதுமில்லை. எனக்கும் தண்டனை வழங்கப்படுமா? என் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்படுமா? இப்போது கவலையாக இருக்கிறது” என்று மாணவிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தியினை பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.
https://twitter.com/MahuaMoitra/status/1656839094926983170?s=20
- பி.ஜேம்ஸ் லிசா









