பாலுமகேந்திரா இயக்கிய, ‘வண்ண வண்ண பூக்கள்’ படம் மூலம் பிரபலமானவர் நடிகை வினோதினி. 16 வருடங்களாக நடிக்காமல் இருந்த நடிகை வினோதினி இப்போது மீண்டும் நடிக்க இருக்கிறார்.
இயக்குநர் விசு மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை வினோதினி. ’நாயகன்’ உட்பட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், கஸ்தூரி ராஜாவின் ‘ஆத்தா உன் கோயிலிலே’ படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
‘வண்ண வண்ண பூக்கள்’ படத்துக்குப் பிறகு முன்னணி நாயகர்களுடனும் நடித்த அவர், திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தார். இப்போது அவர் மீண்டும் நடிப்புக்கு திரும்பி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இயக்குநர் விசு-வின் 7 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். மணிரத்னத்தின் நாயகன் படத்தில் சிறுவயது சாராவாக நடித்தேன். மணிரத்னத்தை அந்தப்படத்திற்கு பிறகு நான் பார்த்ததே இல்லை. 16 வயதிலேயே நாயகியாகிவிட்டேன். தமிழை விட கன்னடத்தில் நிறைய படங்களில் நாயகியாக நடித்தேன். கன்னடத்தில் நிறைய வாய்ப்புகள் வந்ததால் தமிழில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை, நான் திரும்பி வரும்போது இங்கு நிறைய புது நடிகைகள் வந்துவிட்டனர். அதனால் குணச்சித்திர வேடங்களில் நடித்தேன். த
திருமணத்திற்கு பிறகு குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் சேர்ந்து வந்துவிட்டதால், சினிமாவிலிருந்து, ஒதுங்க வேண்டியதாகிவிட்டது. கரு.பழனியப்பனின் ’பிரிவோம் சந்திப்போம்’ படத்தில் சின்ன வேடத்தில் நடித்தேன். அவரது சதுரங்கம் படத்திலும் நடித்திருந்தேன். இப்போது பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க வந்துள்ளேன்.
நான் இருந்த போது இருந்த சினிமா , இப்போது இல்லை. சினிமா டெக்னாலஜியில் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. எனக்கு பொருந்தும் பாத்திரங்களில் திரைப்படங்கள், வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறேன். விரைவில் என்னை நீங்கள் திரையில் மீண்டும் பார்க்கலாம். இவ்வாறு நடிகை வினோதினி தெரிவித்தார்.









