முக்கியச் செய்திகள் கதைகளின் கதை

ஃபீனிக்ஸ் போன்று எழுந்து வந்து தமிழர்கள் நெஞ்சில் இடம்பிடித்த அஞ்சலி

தமிழ் சினிமாவில் ஆனந்தி, மணிமேகலை, மாதவி என நாயகி கதாபாத்திரங்களின் பெயரை கேட்டாலே நம் கண்முன் தோன்றுபவர் நடிகை அஞ்சலி தான். பார்ப்பதற்கு வெள்ளந்தியாக, பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் அஞ்சலியை, முதல்முறை பார்க்கும் போதே, யாருக்கும் அவரை பிடிக்காமல் போனால்தான் ஆச்சரியம். அந்தளவுக்கு அவரது எளிமையான தோற்றமும் எதார்த்த நடிப்புமும் தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் கடந்த 15 ஆண்டுகளாக மக்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம்வரச் செய்துள்ளது.

பொதுவாக திரைத்துறையில் நாயகியாக ஒரு சில படங்களில் நடித்துவிட்டாலே அவர்களின் பேட்டியில் பகட்டுத்தனம் தென்படும். ஆனால், திரைத்துறையில் நுழைந்து 15 ஆண்டுகள் ஆன நிலையிலும், அஞ்சலியின் கலகலப்பான பேச்சும், பகட்டுத்தனம் இல்லாத உடல் மொழியும் அவரை எப்போதும் நம் குடும்ப உறுப்பினர் போலவே நினைக்கவைத்து விடும். அவரின் தாய் மொழி தெலுங்கு என்றாலும், தொலைக்காட்சிகளுக்கு அளிக்கும் பேட்டிகளில், முடிந்த அளவு அந்தந்த மாநில மொழியில் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் அஞ்சலி.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடிப்பில் ஆர்வம் கொண்ட அஞ்சலி, தன்னுடைய திரைப் பயணத்தை தெலுங்கு சினிமாவில் இருந்துதான் தொடங்கினார். “போட்டோ” மற்றும் “பிரேமலேக ராசா” என இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், அந்த படங்கள் திரையரங்கிற்கு வரவில்லை. இதன் பிறகுதான் தமிழில் இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான ’கற்றது தமிழ்’ திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. இந்தப்படத்தில் ஆனந்தியாக அறிமுகமான அஞ்சலியின் நடிப்பும் அவரது வெகுளித்தனமும் அனைவரையும் கவர்ந்தது.

அஞ்சலிக்கு கற்றது தமிழ் அறிமுக படமாக இருந்தாலும் படத்தில் ஆனந்தி கதாபாத்திரத்திற்கு அஞ்சலி பொருந்திபோனது போல் வேறு ஒரு நடிகை பொருந்தி போயிருப்பாரா என்பது சந்தேகம்தான். பொதுவாக திரைத்துறையில் அறிமுகமாகும் நாயகிகள், காலேஜ் பெண்ணாகவோ அல்லது குடும்ப பெண்ணாகவோதான் பெரும்பாலும் அறிமுகம் செய்யப்படுகிறார்கள். ஆனால், தன்னுடைய முதல் படத்திலேயே சூழ்நிலையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட விலை மாதுவாக நடிக்கும் தைரியத்தை பெற்றிருந்தார் அஞ்சலி.

உண்மையில் சிவாஜி, ஆழ்வார், தீபாவளி என அந்தாண்டு வெளியான பெரிய படங்களில் எல்லாம் அசின், த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்ட நாயகிகள் ரசிகர்களை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்த நேரத்தில், ஏற்கனவே பார்த்து பழகியது போன்ற, வெள்ளைத்தோலுக்கு சற்றும் சம்பந்தமே இல்லாதது போன்ற ஒரு முகத்தை தன்னுடைய நாயகியாக தேர்வு செய்திருந்தார் இயக்குநர் ராம். அவரது தேர்வு சோபிக்கவில்லை. ‘கற்றது தமிழ்’ வெளியாகி 15 ஆண்டுகள் ஆன நிலையிலும், ஆனந்தியும், பிரபாகரனும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து அமர காதலர்களாக இருப்பதே அதற்கு சாட்சி எனலாம்.

தந்தையின் இறப்பால் அழுது கொண்டிருக்கும் ஆனந்தியை தேற்றுவதற்காக, அவள் அருகில் அமர்ந்திருக்கும் பிரபாகர், “என்ன இருந்தாலும் கோழி இறகு பிடிச்சு கொடுத்த அதே குட்டி ஆனந்திதானே எனக்கு” என கூறும்போது, அத்தனை கவலைகளையும், அழுகையையும் விழுங்கிவிட்டு, ‘நெஜமாத்தான் சொல்றியா’ என வெள்ளந்தியாக அஞ்சலி கேட்பது, ரசிகர்களின் அடிமனதில் புதைந்திருக்கும் தோழிகளை மீண்டும் மீண்டும் மனக்கண் முன்னே கொண்டுவந்தது. கூடவே “உனக்காகத்தானே இந்த உயிருள்ளது என்ற யுவனின் பாடலும் காட்சி அமைப்பும் ரசிகர்களின் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன.

 

கற்றது தமிழ் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி படமாக அமையவில்லை என்றாலும், படத்தின் இயக்குநர் ராம், நடிகர்கள் அஞ்சலி, ஜீவா ஆகியோருக்கு கற்றது தமிழ் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படத்திற்காக 2008ம் ஆண்டு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார் அஞ்சலி. இதனைத் தொடர்ந்து சுந்தர் சி.யுடன் இனைந்து நடித்த ஆயுதம் செய்வோம் மற்றும் கன்னடத்தில் ஹாங்கநாசு ((Honganasu)) என இரு படங்களில் அஞ்சலி நடித்திருந்தார். ஆனால் இந்த படங்களும் அவருக்கு குறிப்பிட்டு சொல்லும் வெற்றிபடங்களாக அமையவில்லை. இந்த தருணத்தில் தான், 2010ம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு திரைப்படம் அஞ்சலியின் திரைப்பயணத்தில் வசூல் ரீதியாகவும் திரைக்கதை அமைப்பிலும் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

வணிக வளாகங்கள் மற்றும் ஜவுளிக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் கஷ்டங்களையும், அவர்களின் சிரமங்களையும் ஆய்வு செய்து அந்த படத்தை எடுத்தார் வசந்தபாலன். கனி என்கிற கதாபாத்திரத்தில் தூத்துக்குடி வட்டார மொழி பேசி நடித்திருந்தார் அஞ்சலி. கடையில் துணி வியாபாராத்தில் ஈடுபடும் பெண்ணின் உழைப்பை, உடல் உபாதை போன்ற தருணத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் அசவுகரியத்தை என தன் நடிப்பின் வழியே வெளிப்படுத்யிருந்தார் அஞ்சலி. அதிரடி கனியாக வரும் காட்சிகளும் கடை மேலாளரின் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் காட்சியும் மறக்க முடியாதவை. அஞ்சலியின் நடிப்பு திறமையை பாராட்டும் விதமாக அந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும், சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் தட்டிச் சென்றார்.

 

தொடர்ந்து கவுதமனின் மகிழ்ச்சி, தாமிரா இயக்கத்தில் உருவான ரெட்டைச்சூழி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் பெரிய வெற்றியை கொடுத்ததென்று கூறமுடியாது. 2011ல் மட்டும் தூங்காநகரம், கருங்காலி, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், தம்பி வெட்டோத்தி சுந்தரம் என 8 படங்களில் நடித்தார் அஞ்சலி. அந்த படங்களில் ஜெய்யுடன் இனைந்து நடித்திருந்த ‘எங்கேயும் எப்போதும்’ படம் அஞ்சலியை ரசிகர்கள் மனதில் மணிமேகலையாக உட்காரவைத்தது. வெவ்வேறு இடங்களில் நடக்கும் இரண்டு சுவாரஸ்யமான காதலை, ஒரு பேருந்து விபத்து எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை மையக்கதையாக வைத்து திரைக்கதை அமைத்திருந்தார் அறிமுக இயக்குநர் சரவணன். வெகுளித்தனத்துடன் கூடிய கிராமத்து நாயகியாக அனன்யா நடித்தால், அதிரடியாக பேசும் விவரமான பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார் அஞ்சலி.

அதே நேரம், எங்கேயும் எப்போதும் படத்தில் அஞ்சலி, ஜெய்யை டீல் பண்ணுகிற விதமும், வேலைக்கு ஆள் எடுப்பதுபோல பல்வேறு விதமான சோதனைகளுக்குப் பிறகே, போனால் போகிறது என்கிற தொனியில் ”ஐ லவ் யூ” என்று சொல்லும் தோரணையிலும், ”நீ கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கோ… நான் இப்பவே கட்டிக்கிறேன்” என்று காதலை வெளிப்படுத்தும் இடத்திலும், நடிப்பென்றே தெரியாத அளவுக்கு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் மனதில் பதிந்தார் அஞ்சலி. படத்தின் இறுதிக் காட்சியில் வெடிக்கும் விம்மலையும் கண்ணீரையும் கட்டுப்படுத்திக்கொண்டு, டாக்டரிடம் கலங்குவதுடன் பார்வையாளர்களையும் கலங்க வைத்தார். இப்படி இந்தப்படத்தில், தான் ஏற்ற மணிமேகலை என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ப கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனது நடிப்பால் வெயிட்டேஜ் கூட்டியிருந்தார் அஞ்சலி. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான சைமா விருதையும் பெற்றார்.

 

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக்கொண்ட அஞ்சலி, ‘எங்கேயும் எப்போதும்” படத்தின் தெலுங்கு பதிப்பின் மூலம் தாய் மொழியான தெலுங்கில் மீண்டும் வெற்றி நாயகியாக காலடி எடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, ((Seethamma Vakitlo Sirimalle Chettu)) சீதாமா வக்கிட்லோ சிரிமல்லே சேட்டு, ((Balupu)) பலூபு, ((Masala)) மசாலா, ((Geethanjali)) கீதாஞ்சலி போன்ற தெலுங்கு படங்களில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தார். அஞ்சலி நடித்த படங்கள் பெற்ற தொடர் வெற்றி அவரை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழச் செய்தது. குறிப்பாக சீதாமா வக்கிட்லோ சிரிமல்லே சேட்டு மற்றும் கீதாஞ்சலி படங்களில் நடித்ததற்காக ஆந்திரா மாநில அரசு திரைப்படத்துறையின் உயர் விருதான நந்தி விருதை இரண்டு முறை சிறந்த நடிகைக்கான பிரிவில் பெற்று கவனம் ஈர்த்தார் அஞ்சலி.

 

இதற்கிடையே, தமிழில் “அரவான், கலகலப்பு, வத்திக்குச்சி” போன்ற படங்களிலும் நடித்து, தமிழ் சினிமாவிலும் தன் இருப்பை பதிவு செய்து வந்தார். வத்திக்குச்சி படத்தில் இடம்பெற்றிருந்த AMMA WAKE ME UP பாடல் கல்லூரி பெண்களின் ஃபேவரைட் பாடலாக இருந்தது. விமல், சிவா, சந்தானம், ஓவியா என ஒரு நட்சத்திர பட்டாளத்துடனே அஞ்சலி நடித்த கலகலப்பு படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி ஈட்டியது. ஆனால், அதேநேரம் அஞ்சலியின் தனிப்பட்ட வாழ்வில் இருந்த கலகலப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.

அதுவரை அஞ்சலியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிவராத தகவல்கள் எல்லாம் அப்போதுதான் வர ஆரம்பித்தன. 2012ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அஞ்சலியின் திரை வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறத் தொடங்கியது. தனது வளர்ப்பு தாயான சித்தி ‘பாரதி தேவி’ மற்றும் இயக்குநர் களஞ்சியம் ஆகியோர் மீது அஞ்சலி தெரிவித்த புகார்களும், அதற்கு மறுப்பு தெரிவித்து அஞ்சலி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த இயக்குநர் களஞ்சியம் ஆகியோருக்கும் இடையிலான பிரச்சனை, தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் பரபரப்பாக இயங்கிவந்த முன்னணி நடிகை அஞ்சலியின் சரிவுக்கு முதல் காரணமாக அமைந்தது.

நடிகைகள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் பொருளாதார பிரச்சனை, விருப்பம் இல்லாத கதைகளிலும் கட்டாயத்தின் பெயரில் நடிக்க நிர்பந்திக்கப்படுவது, வாய்ப்புக்காக வருவோரை பாலியல் நெருக்கடிக்குள்ளாக்குவது உள்ளிட்டவை அஞ்சலி மூலமாக திரைத்துறையில் மீண்டும் விவாத பொருளாகின. இதற்கிடையில் அஞ்சலி காணாமல் போனது தென்னிந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியது. அஞ்சலி விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது.

ஒரு பக்கம் நடிகை அஞ்சலி மாயமானதாக தகவல் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், திரைப்படங்களிலும் சீரியல்களிலும் மட்டுமே காண்பிக்கப்பட்டு வந்த சித்தி கொடுமை, ஒரு நடிகையின் வாழ்க்கையிலும் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியது என்பதற்கு சாட்சியாக மாறியிருந்தார் அஞ்சலி. 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில், ஹைதராபாத்தில் இருந்தபடி ஊடகங்களுக்கு அஞ்சலி பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டிதான், அஞ்சலி பொதுவெளியில் சொன்ன முதல் ஆதாரமாக மாறியது.

அந்த பேட்டியில் அவர் கூறியிருந்ததன் படி “என்னுடன் இருப்பது எனது அம்மா என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அவர் என் அம்மா கிடையாது. சென்னையில் என்னுடன் இருக்கும் குடும்பமும், என்னுடைய சொந்த குடும்பம் இல்லை. என்னுடைய கோடிக்கணக்கான பணத்தை சித்தி பாரதி தேவி கையாடல் செய்து விட்டார். சித்திக்கு இயக்குநர் களஞ்சியம் உறுதுணையாக இருக்கிறார். இருவரும் என்னை பணம் கொட்டும் ஏ.டி.எம். மெஷின் போலவே பயன்படுத்தினார்கள். அவர்கள் என்னால் தாங்க முடியாத அளவுக்கு என்னை கொடுமைப்படுத்தினார்கள்” என்று மனதில் இருந்ததை போட்டு உடைத்திருந்தார் அஞ்சலி. உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சென்னைக்கு வரமாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார். இது, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் காட்டுத்தீயாய் பரவியது.

இதனால் அஞ்சலிக்கு என்ன ஆச்சு, அவரை யார் மிரட்டுகிறார்கள் என கேள்விகள் எழுந்த நிலையில், தீடீரென ஒரு நாள் அஞ்சலி அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து காணாமல் போனதாக தகவல் வெளியானது. போலீசார் அஞ்சலியை தேடத் தொடங்கினர். இதற்கிடையே அஞ்சலியின் சித்தி பாரதி தேவி, அஞ்சலியை மீட்டுத் தரக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததுடன், தன் மீதான புகார் குறித்தும் விளக்கம் அளித்தார்.

“என்னுடைய அக்கா பார்வதி தேவியின் மகள்தான் அஞ்சலி. அவர்களின் குடும்ப வறுமை காரணமாக அஞ்சலியை தத்தெடுத்து வளர்த்தேன். சினிமாவில் அஞ்சலி பெரிய ஹீரோயினாக வர நான்தான் காரணமாக இருந்தேன். ஆனால், நான் அவரின் சொத்தை அபகரிப்பதாக பெய்யான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். அஞ்சலியின் மனதை யாரே கெடுத்துள்ளனர். அஞ்சலிக்கு கொடுமையான நோய் இருக்கிறது. மாத்திரை சாப்பிடாவிட்டால் அவரின் உயிருக்கே ஆபத்து. சினிமாவில் அஞ்சலியை வளர்த்துவிட்ட நான், இனி அஞ்சலியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்க மாட்டேன். அஞ்சலி சம்பாதித்த பணம் எதுவும் எனக்கு தேவை இல்லை. எல்லாவற்றையும் திருப்பி கொடுத்து விடுகிறேன்” என்றார் பாரதி தேவி.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் அஞ்சலியின் பின்புலம் குறித்து காவல்துறையினரும் ஊடகங்களும் ஆராயத் தொடங்கினர். அதன்படி, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரசோலி பகுதிதான் அஞ்சலியின் சொந்த ஊர் என தெரியவந்தது. அப்பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர் சிவ பிரகாஷ் – பார்வதி தேவி தம்பதிக்கு மகளாக பிறந்த அஞ்சலியின் இயற்பெயர் திரிபுர சுந்தரி. அஞ்சலியின் சித்தி பாரதி தேவிக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள் என்பதால், தனது அக்கா பார்வதி தேவியின் மகள் திரிபுர சுந்தரியை தத்தெடுத்து அவருக்கு அஞ்சலி என பெயரிட்டுள்ளார். மேலும் பாரதி தேவிக்கு சினிமா ஆசையும் இருந்ததால், தன்னால் சினிமாவில் சாதிக்க முடியாததை தனது வளர்ப்பு மகள் அஞ்சலியை வைத்து சாதித்துக்கொள்ள தீர்மானித்துள்ளார். இந்த சூழலில் தான் இயக்குநர் களஞ்சியத்தின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவரிடம் திரைப்பட வாய்ப்புக்காக அஞ்சலியை அழைத்துச் சென்றுள்ளார். தொடக்கத்தில் நடிப்பை பற்றி எதுவும் தெரியாத அஞ்சலிக்கு நடிப்பு பயிற்சி கொடுத்ததும் களஞ்சியம் என்றே கூறப்படுகிறது. இதன்பிறகு களஞ்சியத்தின் இயக்கத்தில் சத்தமின்றி முத்தமிடு உள்ளிட்ட படங்களில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அந்தப்படங்கள் வெளிவரவில்லை. இதன் பிறகே, ராமின் கற்றது தமிழில் அறிமுகம் ஆகியிருக்கிறார்.

கற்றது தமிழில் அஞ்சலியின் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பும், அடுத்தடுத்து கிடைத்த சினிமா வாய்ப்புகளும், அஞ்சலியின் சித்தி பாரதி தேவி எதிர்பார்த்ததுபோல் அஞ்சலி மூலம் வீட்டின் வருவாய் பெருக்கத் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அடையாளம் காணப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் தான், தன்னுடைய சித்தி குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அதற்கு இயக்குநர் களஞ்சியம் துணையாக இருப்பதாகவும் பரபரப்பு புகாரளித்தார் அஞ்சலி. அவர் மாயமானதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், முடித்துக்கொடுக்க வேண்டிய படங்களை முடித்துக்கொடுக்காததால் ஏற்பட்ட அழுத்தமும் ஒரு காரணம் என பேசப்பட்டது. இந்த நிலையில் தான், அஞ்சலியை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார் அவரின் சித்தி பாரதி தேவி.

அஞ்சலி தன் மீது அவதூறு பரப்புவதாக புகார் கூறிய இயக்குநர் களஞ்சியம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னனி ஹீரோயினாக வளர்ந்து வந்துக்கொண்டிருந்த நிலையில், அஞ்சலியை சுற்றி எழுந்த சர்ச்சைகளும், புகார்களும், கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கிடையே,பாரதி தேவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடங்கியது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தம்பிதுரை, ஏற்கனவே பெங்களூரில் போலீஸ் அதிகாரி முன்பு நடிகை அஞ்சலி ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனவே அவரை யாரும் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூற முடியாது என்றார். இப்படி ஒரு பக்கம் வழக்கு சென்று கொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் திரையுலகுக்கு வந்த அஞ்சலி, திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

சூர்யாவின் சிங்கம் 2 படத்தில் கிளாமரான குத்து பாடலுக்கு நடனமாடியிருந்தார். உடல் எடை அதிகரித்து கற்றது தமிழ் அஞ்சலியா இது என கேட்கும் அளவுக்கு மாறிப் போயிருந்தார். தமிழ் படங்களை தவிர்த்த போதும் தெலுங்கு, கன்னட மொழி படங்களில் தொடர்ந்து நடித்தார். குறிப்பாக, மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருடன் “ரன விக்ரம்” எனும் படத்தில் நடித்திருந்தார். 2 ஆண்டுகள் தமிழ் திரையுலகம் வரலாமல் இருந்த அஞ்சலி நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஜெயம் ரவியுடன் ‘சகலகலா வல்லன்’ படத்தின் மூலம் RE ENTRY கொடுத்தார். பின்னர் ‘மாப்பள சிங்கம்’ உள்ளிட்ட காமடி ஜானர் படங்களிலும், கேமியோவாக தோன்றுவது அல்லது ஒரு பாடலுக்கு நடனமாடுவது என கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டிருந்தார்.

அவ்வளவுதான் அஞ்சலி என நினைத்திருந்த போதுதான், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படத்தில் ‘பொன்னி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். ஆணாதிக்க சமூகத்தால் சூழ்நிலை கைதியாகும் பெண்களின் நிலையை, இயல்பான, அதேநேரம் அழுத்தமான நடித்து, நடிப்பில் ஒரு முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் அஞ்சலி. இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியான ஐஃபா விருது கிடைத்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கிடைத்த கதாபாத்திரத்திற்கு நடிப்பின் மூலம் நியாயம் செய்த அஞ்சலிக்கு, ஐஃபா விருது எனர்ஜி பூஸ்டராக இருந்தது. இதற்கிடையில் உடல் எடை குறைப்பதிலும் கவனம் செலுத்தினார். தன்னுடைய கடின உழைப்பால் உடல் எடையை விறுவிறுவென குறைத்த நடிகை அஞ்சலி, இதுதொடர்பான படங்களை சமூக வலைத்தள பக்கங்களிலும் பதிவிட்டு வந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

2007ல் கற்றது தமிழின் மூலம் அறிமுகமான அஞ்சலி, 10 ஆண்டுகளுக்கு பிறகு 2017ல் அதே இயக்குநர் ராம் இயக்கிய தரமணி படத்தில் இணைந்தார். தனித்து வாழும் பெண்களின் நிலையும், ஆண்கள் சூழ வாழும் பெண்களின் நிலையும் எப்படி இருக்கிறது என்பதை பேசியது தரமணி திரைப்படம். குறிப்பாக, ஊரிலிருந்து வேலைத்தேடி சென்னைக்கு வரும் கடனாளி செளமியா, வெளிநாடு சென்ற பிறகு புறத்தோற்றத்தால் மாற்றம் கண்ட சௌமியா, முன்னாள் காதலனின் பாலியல் மிரட்டலுக்கு உள்ளாக்கப்படும் சௌமியா என நடிப்பில் இருவேறுபட்ட EXTREAM களிலும் தன்னை நிலைநிறுத்தினார். பேரன்புவில் விஜியாகவே வாழ்ந்தார். இங்கு குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், தங்கமீன்கள் படத்தை தவிர, கற்றது தமிழ், தரமணி, பேரன்பு ஆகிய மூன்று படங்களிலும் அஞ்சலிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை கொடுத்து, அஞ்சலியின் சினிமா கேரியரை உயர்த்தியவர் ராம். ஆகையால் தான், திரையுலகில் தமது வழிகாட்டி ராம் என்கிறார் அஞ்சலி.

இந்தியாவில் முதல் முறையாக 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட HORROR படமான லிசா, கொரோனா காலகட்டத்தில் ஓடிடி தளங்களில் வெளியான நிசப்தம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் பண்ண உட்றணும்” என கிடைத்த வாய்ப்புகளில் கோல் அடித்தார். நெடுமுடி வேணு, ரேவதி, சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், பார்வதி திருவோட்டு என பிரபலங்கள் பலர் இணைந்திருந்த நவரசாவில் கர்ப்பிணியாக நடித்து அசத்தினார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக் படமான ‘வக்கில் சாப்” படத்தில் மைய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் இணையும் ஆர்சி 15 படத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

21 வயதில் சினிமாவில் காலடி எடுத்துவைத்த அஞ்சலி, இந்த 15 ஆண்டுகளில் மாபெரும் உச்சத்தையும் தொட்டுள்ளார். எண்ணற்ற சர்ச்சைகளையும், சறுக்கல்கலையும் சந்தித்துள்ளார். ஆனால் எந்த காரணத்திற்காகவும் சினிமாவில் இருந்து அவர் தன்னை விலக்கிக்கொண்டதே இல்லை. ஒவ்வொரு முறை விழும்போதும் ஃபீனிக்ஸ் போன்று எழுந்து வருகிறார் தமிழர்கள் நெஞ்சில் இடம் பிடித்த ஆனந்தி எனும் அஞ்சலி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று முதல் பள்ளிகள் திறப்பு

Web Editor

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்; தொடரை இழந்தது இந்தியா

Halley Karthik

கடற்படையினரிடம் விசாரணை நடத்துவேன்: இலங்கை அமைச்சர்

Vandhana