புதிய சென்சார் கட்டுப்பாடுகள்: கொந்தளிக்கும் திரைத்துறையினர்

சினிமாவில் இரவு பகலாக பல கலைஞர்களால் கஷ்டப்பட்டு செட் உருவாக்கப்பட்டு, நடிகர்களை நடிக்க வைத்து பல சிரமங்களுக்கு இடையே ‘ஆக்ஷன் கட்’ சொல்லப்பட்டு எடுக்கப்படும் பல சீன்கள், சென்சார் கட்டில் வெட்டி எறியப்படும் போது…

சினிமாவில் இரவு பகலாக பல கலைஞர்களால் கஷ்டப்பட்டு செட் உருவாக்கப்பட்டு, நடிகர்களை நடிக்க வைத்து பல சிரமங்களுக்கு இடையே ‘ஆக்ஷன் கட்’ சொல்லப்பட்டு எடுக்கப்படும் பல சீன்கள், சென்சார் கட்டில் வெட்டி எறியப்படும் போது மிகவும் கனத்த இதயத்துடனே CBFC சான்றிதழை திரைப்படத்துறையினர் பெறுகின்றனர். ஆனால் CBFC அனுமதி அளித்தாலும் மத்திய அரசு நினைத்தால் ஒரு படத்தை தடை செய்ய புதிய மசோதா ஒன்று வழிவகுப்பதாக திரைத்துறையினர் பலரும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிப்ரவரி 2, 2019 ஒளிப்பதிவு திருத்த மசோதா ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே இருக்கும் ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) புதிய பிரிவு 6AA மற்றும் பிரிவு 7 ல் புதிதாக உட்பிரிவு 1A போன்ற சில புதிய திருத்தங்களை உட்கொண்டுள்ளது இந்தப் புதிய ஒளிப்பதிவு மசோதா. 2013ல் ஜஸ்டிஸ் முகுல் முட்கல் மற்றும் 2016ல் ஜஸ்டிஸ் ஸ்ரீ ஷியாம் பெனகல் ஆகிய இரு நிபுணர்களின் குழுவினரால் செய்யப்பட்ட பரிந்துரைகள் ஆராயப்பட்டு, மேலும் பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்து பழைய ஒளிப்பதிவு சட்டத்தின் உள்ள அனைத்து சிக்கல்களையும் பரிசீலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்த புதிய மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்தப் புதிய ஒளிப்பதிவு வரைவு மசோதா மூலம், சென்சார் போர்டு மற்றும் நீதிமன்றம் மட்டுமல்லாது, மத்திய அரசுக்கும் திரைப்படங்களில் திருத்தம் செய்ய உரிமை உண்டு என்பது போன்ற பல மாற்றங்களை இந்த மசோதாவில் கொண்டுவரப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.

இதுவரை, ஒரு திரைப்படத்திற்கு சென்சாரில் U, A அல்லது U/A சான்றிதழ் மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த திருத்த மசோதாவின் மூலம் புதிதாக U/A 7+, U/A 13+ and U/A 16+ வயதினருக்கு ஏற்றார் போல் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்த சான்றிதழை ஒரு திரைப்படம் பெற்ற பின்னும், மத்திய அரசு அந்த திரைப்படத்தை மறு தணிக்கை செய்து அந்த திரைப்படத்தின் சான்றிதழை மாற்றவும் அல்லது அந்த திரைப்படத்தையே தடை செய்யவும் உரிமை உண்டு என்ற அனுமதியை மத்திய அரசிற்கு இந்த மசோதா வழங்குவதாக திரைத்துறையினர் பலரால் விமர்சிக்கப்படுகிறது. அதாவது, இந்தப் புதிய சட்டத்திருத்த வரைவில், இந்தப் பிரிவு 5B (1)-ஐ மீறும் எந்தவொரு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழையும் புதிய பிரிவு 6 (1)-ன் படி, மத்திய அரசு திரும்பப் பெற முடியும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என திரைத்துறையினர் பலர் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.

கமல்ஹாசன், அனுராக் காஷ்யப், வெற்றிமாறன், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக…அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல…” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த மசோதா விற்கான கருத்துக்கேட்பு இன்று ஜூலை 2 முடிவடைவதனால் “ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 குறித்த உங்கள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுங்கள்” என கூகுள் லிங்க் ஒன்றையும் தனது ட்வீட்டில் இணைத்து தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

CBFC தணிக்கை சான்றிதழ்பத்து வருட காலம் மட்டுமே செல்லுபடியாகும் என இதுவரை இருந்ததை மாற்றி, புதிய திருத்தத்தின் மூலம் காலக்கெடு ஏதுமின்றி ஆயுள் முழுவதுக்குமான தணிக்கை சான்றிதழ் செல்லுபடியாகும் எனவும்,ஒரு படைப்பாளியின் எழுத்துபூர்வ அனுமதியில்லாமல், அதை நகல் எடுக்கவோ, அதை வீடியோவாகவோ, ஆடியோவாகவோ பதிவு செய்யவோ, ஒளிபரப்பு செய்யவோ கூடாது.

மீறினால், 3 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும், ரூ.3,00,000 அல்லது படத்தின் தயாரிப்புச் செலவில் 5 சதவிகிதம் வரை அபராதமும் வசூலிக்கப்படும் போன்ற திருத்தங்களும் இந்த புதிய மசோதாவில் இடம்பெற்றிருந்தாலும், மத்திய அரசு இதுபோன்ற தணிக்கைகளில் ஈடுபடுவது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானதாக அமைந்துவிடும் என திரைத்துறையினர் மத்தியில், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (Film Certification Appellate Tribunal) கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில் இப்படியொரு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது இந்திய திரைத்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • சி.பிரபாகரன்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.