நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ் இனப்படுகொலை நினைவு மாதத்தின் தொடக்க நாளான இன்று சென்னை வளசரவாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொடக்க நாள் நிகழ்வு நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “உலகில் ஒடுக்கப்பட்ட பல இனங்கள் வென்று பெருமையோடு வாழ்வதை போல் ஈழ தமிழனமும் வாழவேண்டும். உலகில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் போர்க்குற்றம் என்றளவில் நிற்கிறார்கள், நாங்கள் போரே குற்றம் என்கிறோம், அது திட்டமிட்ட இனப்படுகொலை என்கிறோம் இதை உலகிற்கு உணர்த்தத் துடிக்கிறோம்” என்றார்.
வேளச்சேரியில் நடைபெற்ற மறு தேர்தலை பற்றி பேசிய அவர், “தேர்தல் ஆணையமே நாடகக்குழு, மருத்துவமனைக்கு செல்பவர்கள், மளிகைக் கடைக்கு பொருட்கள் வாங்க செல்பவர்களை பிடிக்கிறது. ஆனால் பணம் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறவர்களை பிடிக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
நடிகர் விவேக்கின் இறப்பைப் பற்றி பேசிய சீமான், தான் தடுப்பூசி போடவில்லை என்றும் விசாரித்த வரை விவேக்கிற்கு மாரடைப்பு இருந்துள்ளது. அதற்கு தடுப்பூசி காரணமல்ல, ஒருவேளை ஊசி போட்டதால் கூடுதலாக வந்திருக்கலாமே தவிர முழுவதும் தடுப்பூசியே காரணமல்ல என்றார்.







