பார்வை மாற்றுத்திறனாளி மாணவியின் உயர்கல்விக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என நடிகர் விஜய் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்குவதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சி இன்று நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அதே சமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களும் இடம் பெற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களில் கிர்த்தி வர்மன் என்னும் அரசுப்பள்ளி மாணவன் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் பெற்று கிருஷ்ணகிரி மாவட்ட வேப்பனஹள்ளி தொகுதியில் முதல் இடம் பிடித்தார். விழாவின் போது மாணவன் கிர்த்தி வர்மன் வரைந்த நடிகர் விஜயின் ஓவியத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்.
மற்றொரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவிக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும் ப்ரெய்லி முறையில் உயர்க்கல்வி பயில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என நடிகர் விஜய் அறிவித்தார்.








