ஜப்பானில் பாலியல் உறவுக்கான குற்றங்களை குறைக்க சட்டபூர்வ ஒப்புதல் வயதில் மாற்றம்!

ஜப்பான் அரசு பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயது வரம்பை 13 வயதிலிருந்து 16 ஆக உயர்த்தியுள்ளது. ஜப்பான் நாட்டில், பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு செய்துள்ளது. அதில்…

ஜப்பான் அரசு பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயது வரம்பை 13 வயதிலிருந்து 16 ஆக உயர்த்தியுள்ளது.

ஜப்பான் நாட்டில், பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு செய்துள்ளது. அதில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த சட்டப்பூர்வ பாலியல் ஒப்புதல் வயது ஜப்பானில் தான் இருந்து வந்தது. தற்போது இந்த வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் 1907-ம் ஆண்டில் இருந்து 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் பெற்றவர்களாக கருதப்பட்டனர். இதனால் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது வயது வரம்பை 16 ஆக ஜப்பான் அரசு உயர்த்தி உள்ளது.

முன்பு ஜப்பானில், பாலியல் பலாத்காரம் என்பது “கட்டாயமான உடலுறவு” என்று மட்டுமே வரையறுக்கப்பட்டது. ஆனால் இப்போது அது “ஒப்புதல் இல்லாத உடலுறவு” என்று பரவலாக அங்கீகரிக்கப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது மாற்றப்பட்ட சட்டத்தின் மூலம் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் நோக்கங்களுக்காக மிரட்டுதல், உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.2.86 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தத்துக்கு மனித உரிமை மற்றும் பல தன்னார்வ அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. பாலியல் உறவுக்காக சட்டப்பூர்வ ஒப்புதல் வயது இங்கிலாந்தில் 16 ஆகவும், பிரான்சில் 15 ஆகவும், ஜெர்மனி, சீனாவில் 14 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.