நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் பின்னணி குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
2012ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை இங்கிலாந்தில் இருந்து நடிகர் விஜய் இந்தியாவிற்கு இறக்குமதி செய்து வாங்கினார். இறக்குமதி வரியாக அந்த சொகுசு காரின் விலையில் இருந்து 20% கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. நடிகர் விஜய், அந்த காருக்கு விதிக்கப்பட்டிருந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அந்த வழக்கை நேற்று நீதிபதி சுப்பிரமணியன் அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
நீதிபதி சுப்பிரமணியம் இதற்கு முன்னதாக புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் வெறும் கண் துடைப்பு என விமர்சித்தவர். முன்னதாக அனைத்து அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதற்கு முன்னுதாரணமாக தனது அறையில் சிசிடிவி கேமரா பொருத்திக் கொண்டார். அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவு தொடங்கவேண்டும் என ஆணையிட்டவர்.







